Watch Video: ‛வாழ்வில் நூறானந்தம்.. வாழ்வே பேரானந்தம்..’ பழைய சைக்கிள் வாங்கியதை தந்தையுடன் கொண்டாடிய மகள்!
Chhattisgarh : ‛‛பூக்கள் சூடிய பின், தந்தை அந்த பழயை சைக்கிளை வணங்குகிறார். அதுவரை ஆடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அந்த சிறுமி, தன் ஆட்டத்தை நிறுத்திவிட்டு, அவரும், அந்த சைக்கிளை வணங்குகிறார்’’
நூறுகள் வைத்திருப்பவருக்கு ஆயிரத்தின் மீது ஆசை, ஆயிரங்கள் வைத்திருப்போருக்கு லட்சங்கள் மீது ஆசை, லட்சங்கள் வைத்திருப்போருக்கு கோடிகள் மீது ஆசை, கோடிகள் வைத்திருப்போருக்கு... கோடான கோடி மீது ஆசை! இப்படி தான் இயங்குகிறது இந்த உலகம். எதிலெல்லாம் சந்தோசம் இருக்கிறது என்பதற்கு தனியாக வரையறை கிடையாது. காரணம், எதுவெல்லாம் சந்தோசம் தருகிறதோ... அதுவெல்லாம் வரையறைக்கும் அடங்கும்.
ஆம்... நாம் இப்போது பார்க்கப் போகும் செய்தியும் அப்படிபட்டது தான். பைக், கார் என பரிசுகளால் ஒருவருக்கொருவர் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு ஏழை குடும்பம், தான் வாங்கி வந்த பழைய சைக்கிளை கொண்டாடித் தீர்த்த சம்பவம், உண்மையில் நெகிழ்ச்சியானது தான். சத்தீஸ்கரில், கூலித் தொழிலாளி ஒருவர், ஒரு பழைய சைக்கிளை வீட்டிற்கு வாங்கி வருகிறார்,
அந்த சைக்கிளை அவர் சுத்தம் செய்து, பூ மாலையிட்டு, அலங்கரிக்கிறார். இதெல்லாம், அவரது குடிசை வீட்டிற்கு முன்பு நடக்கிறது. சைக்கிளை தொட்டு அவர் அலங்கரிக்கும் போதே, அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிவதை பார்க்க முடிகிறது. அதுவரை அவருக்கு சொந்தமாக சைக்கிள் இல்லை என்பதை அதன் மூலம் அறிய முடிகிறது. கால்களால் நடந்தே அவர் உழைத்திருக்க வேண்டும். இந்த பழைய சைக்கிளை வாங்க, அவர் எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொண்டார், அதற்காக எவ்வளவு சேமித்தார் என்பது அவருக்கே வெளிச்சம்.
அவ்வளவு பூரிப்போடு, அந்த பூஜை நடக்கிறது. தந்தை முகத்தில் அத்தனை சந்தோசம் இருப்பதை அவரது குட்டி மகள் பார்த்து, தரையில் நில்லாமல், குதித்துக் கொண்டே மகிழ்ச்சியில் குதூகலிக்கிறாள் அந்த சிறுமி. நம் வீட்டு குழந்தைகளுக்கு, பைக் அல்லது கார் வாங்கிக் கொடுத்தால் தான், அந்த அளவிற்கு மகிழ்ச்சியை நாம் காண முடியும். காரணம், அது அவர்களுக்கு பெரிய விசயம். அப்படி தான், அந்த சிறுமிக்கும், அந்த சைக்கிள் மிகப்பெரிய விசயமாக இருந்திருக்கிறது. இனி தன் தந்தை, தன்னை தோளில் சுமந்த நடக்கத் தேவையில்லை என்கிற ஏக்கமாக கூட இருக்கலாம். இனி தந்தையுடன் சைக்கிளில் பயணிக்கப் போகும் அந்த நொடியை நினைத்துதான், அந்த சிறுமி ஆர்ப்பரிக்கிறாள்.
பூக்கள் சூடிய பின், தந்தை அந்த பழயை சைக்கிளை வணங்குகிறார். அதுவரை ஆடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த அந்த சிறுமி, படார் என தன் ஆட்டத்தை நிறுத்திவிட்டு, அவரும், அந்த சைக்கிளை வணங்குகிறார்.
‛‛சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு
அட சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு
அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு...’
என்கிற இந்தியன் படத்தின் பாடல் வரிகள் தான், இந்த வீடியோவை பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. வாழ்வில் நூறானந்தம்.. வாழ்வே பேரானந்தம் என்கிற அதே பாடலின் இன்னொரும் வரியும், இவர்கள் குடும்பத்திற்கு கச்சிதமாக பொருந்தும். இந்த உணர்வுபூர்வமான வீடியோவை சத்தீஸ்கர் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛பென்ஸ் கார் வாங்கியதைப் போன்ற மகிழ்ச்சியில் இவர்கள் இருப்பதை பார்க்கும் போது, நெகிழ்ச்சியாக உள்ளது’ என ,நெகிழ்ந்து போய் பதிவிட்டுள்ளார். உண்மையில் இது நெகிழ்ச்சியான பதிவு தான்...
இதோ அந்த வீடியோ...
It’s just a second-hand bicycle. Look at the joy on their faces. Their expression says, they have bought a New Mercedes Benz.❤️ pic.twitter.com/e6PUVjLLZW
— Awanish Sharan (@AwanishSharan) May 21, 2022
மகிழ்ச்சி என்பது தரும் பொருளில் அல்ல, பெரும் இன்பத்தில் இருக்கிறது!