Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (ஏப்ரல் 26) ஆம் தேதி நடைபெறுகிறது. 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. பிரதமர் மோடி தொடங்கி பாஜகவின் முக்கிய தலைவர்கள், இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ஆனால் பிரதமர் மோடி தனது 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்காமல், மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசி வருவதாக எதிர்கட்சிகள் கடும் குற்றம் சாட்டின. ‘காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என சொன்னார்கள்.நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை இப்படி ஊடுருவியர்களுக்கா கொடுக்கப் போகிறீர்கள்?. இந்த நகர்புற சிந்தனை தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை கூட விட்டு வைக்காது’ என பிரதமர் மோடி பேசினார்.
அவரின் இந்த பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் வடக்கு, தெற்கு பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் புகாரளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் முக்கிய தலைவர்களின் பேச்சு கடும் எதிர்வினையை உண்டாக்கும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.