”பசு கோமியம் குடித்தால் கொரோனாவை தடுக்கலாம்” - குடித்து டெமோ காட்டிய பாஜக எம்.எல்.ஏ..
காலை வெறும் வயிற்றில் மாட்டு சிறுநீர் ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்தால் நிச்சயம் கொரோனா வராது என்று உறுதிபட பேசியிருக்கிறார் சுரேந்திர சிங்.
காலை வெறும் வயிற்றில் மாட்டு சிறுநீர் ஒரு கிளாஸ் நீரில் கலந்து குடித்தால் நிச்சயம் கொரோனா வராது என உத்தர பிரதேச மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் ஒரு டெமோ வீடியோ போஸ்ட் செய்திருக்கிறார். உத்தரபிரதேசம் பலியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான சுரேந்திர சிங், மாட்டு கோமியத்தை எவ்வாறு உட்கொள்வது என்பது குறித்த காணொளி வீடியோ ஒன்றை வெளியிட்டார் .
அதில், 50 மில்லி பசு கோமியத்தை குளிர்ந்த நீரில் கலந்து, ஒவ்வொரு நாளும் அதை உட்கொண்டால், கொரோனா வைரஸுக்கு எதிரான “இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை” அடையலாம் என்று தெரிவித்தார். மேலும், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 18 மணிநேரத்துக்கு மேல், பொதுவெளியில் செலவழித்து வந்தாலும், எந்தவித உடல்நல பாதிப்பு இல்லாமல் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறினார். இவரின், வீடியோ தற்போது சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
BJP govermnet ந இதான் ! https://t.co/En7gTxwqox
— Dr Jennifer (@JeniiOfficial) May 9, 2021
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் 2.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 26,636 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 10 லட்சம் மக்கள்தொகையில் சராசரியாக 6,579.8 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது.
கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 2,45,736 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். தமிழகத்தில், இந்த எண்ணிக்கை 1,39,401-ஆக உள்ளது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் தீவிர சிகிச்சைப் படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளில் கடும் பற்றாக்குறை நிலவுகிறது.