Draupathi murmu: ‛திரவுபதி என்பது என் பெயர் அல்ல...’ பெயர் மாறிய ரகசியத்தை உடைத்த குடியரசுத் தலைவர்!
இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக பதவியேற்றார் ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு. பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.
இந்தியாவின் 15 ஆவது குடியரசு தலைவராக பதவியேற்றார் ஒடிசாவைச் சேர்ந்த திரவுபதி முர்மு. பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், இந்தியாவின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.
திரவுபதி முர்மு வரலாறு :
திரவுபதி முர்மு ஜூன் மாதம் 20 ஆம் நாள் 1958 ஆம் ஆண்டு ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பைடாபோசி கிராமத்தில் பிறந்தார். தனது அரசியல் பயணத்தை 1997 ஆம் ஆண்டு ராய்ரங்பூர் பஞ்சாயத் கவுன்சிலராகத் தொடங்கினார். ஒடிசாவிலிருந்து இரண்டு முறை பாஜக எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜார்கண்ட் மாநிலத்தின் 9வது ஆளுநராக பணியாற்றியுள்ளார்.
என் பெயர் திரவுபதி இல்லை !
இன்று இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்ற இவர், பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய இயற்பெயர் திரவுபதி இல்லை என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய இயற்பெயர் திரவுபதி இல்லை. எனது பள்ளி ஆசிரியர் ஒருவர் இட்ட பெயர் தான் இது. அந்த ஆசிரியர் மயூர்பஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் இல்லை. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், பொதுவாக பலசூர் அல்லது கட்டாக் பகுதிகளில் இருந்து தான் வருவார்கள்.
என்னுடைய இயற்பெயரான 'புடி' என்ற பெயர் நன்றாக இல்லை எனக் கூறி ஆசிரியர் ஒருவர் திரவுபதி என எனக்கு பெயர் சூட்டினார் எனக் கூறியுள்ளார்.மேலும், தனது பெயர் பலமுறை மாற்றப்பட்டதாகவும், சந்தாலி கலாச்சாரத்தில் பெயர்கள் என்றும் அழிவதில்லை. ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளது பாட்டியின் பெயரை அவளுக்கு சூட்டுவார்கள்; அதுவே ஆண் குழந்தையாக இருந்தால் தாத்தாவின் பெயரைச் சூட்டுவார்கள் என்று கூறுகிறார் முர்மு.
அதுமட்டுமின்றி, அவரது குடும்பப் பெயர் முர்மு அல்ல. பள்ளி, கல்லூரி காலங்களில் அவரது பெயர் துடு என இருந்ததாகவும், அவரது திருமணத்திற்கு பின் முர்முவாக மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பதவி பிரமாணம் :
பதவியேற்பு விழா பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் நடந்து முடிந்தது. பதவி விலகும் ராம்நாத் கோவிந்த் மற்றும் பதவி ஏற்கும் திரவுபதி முர்மு என இரண்டு ஜனாதிபதிகளின் வருகையுடன் ராஷ்டிரபதி பவனில் இருந்து பாராளுமன்ற கட்டிடம் வரை ஊர்வலம் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிறகு திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் இசை வாத்தியங்களின் இசைக்கு நடுவே சென்ட்ரல் ஹாலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். 21 குண்டு முழங்க பலத்த கரகோஷங்களுடன் இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.