CJI on DMK: நீங்கள் மட்டும் அறிவாளி கட்சி என நினைக்காதீர்கள்.. திமுகவை சாடிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.. ஏன்?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திமுக கட்சி தொடர்பாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடைக்கோரி அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று விசாரணையை நடத்தி வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் உள்பட பலரும் வாதாடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் இருந்தார். அப்போது அவரை பார்த்து தலைமை நீதிபதி, “நீங்கள் இருக்கும் கட்சியை பார்த்து நாங்கள் நிறைய சொல்ல வேண்டும். இந்த வழக்கில் நீங்கள் மட்டும்தான் அறிவாளி கட்சியாக ஆஜராகியிருக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் கூறுவது அனைத்திற்கும் நாங்கள் எதுவும் கூறவில்லை என்பதால், எதையும் நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
CJI: Mr Wilson, The party you represent (DMK) ... i have a lot of things to say. Dont think you are the only wise party appearing. Dont think we are ignoring all that is being said just because we are not saying anything#freebies
— Bar & Bench (@barandbench) August 23, 2022
முன்னதாக இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரமணா,”தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒரே பக்கம் தான் உள்ளனர். அனைத்து கட்சிகளும் இலவசங்கள் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்” எனக் கூறியிருந்தார். அதன்பின்னர் தலைமை நீதிபதி, “நீங்கள் அனைவரும் தேர்தலின் போது மட்டும் இலவசங்கள் வேண்டாம் என்று கூறுகிறீர்களா அல்லது அனைத்து நேரங்களிலும் வேண்டாம் என்று கூறுகிறீர்களா என்று மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்கை பார்த்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கறிஞர் விகாஸ் சிங், ”தேர்தலின் போது தான் இதை கூறுகிறேன். ஏனென்றால் தேர்தலின் போது இது அனைத்து கட்சிகளுக்கும் சமமான ஒன்றாக அமையாது. அதனால் இது மக்களாட்சி தத்துவத்திற்கு எதிராக மாறிவிடும். மேலும் இலவசங்கள் கொடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு செல்லும் சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது” என்று பதிலளித்தார்.
இதற்கு தலைமை நீதிபதி, “அப்போது நீங்கள் அனைவரும் தேர்தலின் போது மட்டும் அறிவிக்கப்படும் இலவசங்கள் குறித்து வாதாடுகிறீர்களா? ஆனால் அதற்கும் மேல் இந்த விஷயம் முக்கியமான ஒன்று. ஏனென்றால் பல சலுகைகளை அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஆகவே இதை தேர்தலின் போது மட்டும் என்று பிரித்து பார்க்க முடியாது. இந்த விஷயத்தை முதலில் நாட்டின் பொருளதாரத்தில் மீது அக்கறை உள்ள நபர்கள் ஆலோசனை நடத்த வேண்டும் என்று நினைத்தோம். அதன்காரணமாக இதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க அளித்தோம்.
ஆனால் தற்போது அதற்கு போதிய அவகாசம் இல்லை. இதற்காக நாங்கள் ஒரு ஆணையத்தை அமைக்க உளோம். மேலும் ஜனநாயகத்தில் நாடாளுமன்றன் விவாதம் நடத்தி ஒரு முடிவிற்கு வரவேண்டும். அந்த விவாதத்திற்கு உதவ இந்த ஆணையத்தின் தரவுகள் உதவியாக இருக்கும். கிராம புறங்களில் ஆடு, மாடுகள் இலவசங்களாக அளிக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன. ஆகவே எது இலவசம்? எது சமூக நலம் என்பதை பார்க்க வேண்டும்.
எனவே இதற்கு வறுமையிலுள்ள மக்களின் நிலையை நாம் அறிய வேண்டும். இங்கே ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு நாம் முடிவு எடுக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.