Kanimozhi MP: உடன்கட்டை ஏறுவது பெருமையா? - மக்களவையில் பாஜகவை விளாசிய திமுக எம்.பி. கனிமொழி
ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தை கற்பிக்க வேண்டும் என, திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன்மீதான விவாதத்தின் போது திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசினார். அப்போது, ”தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர். மாநிலங்களின் நலன் மற்றும் உரிமைகளை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மகாராஷ்டிரா, கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அரசுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படுகின்றனர். ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்.
உடன்கட்டை ஏறுதல் பெருமையா?
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாட்டில் சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஒன்றிய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி செல்கிறது. சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு மிக குறைவான நிதியையே ஒதுக்குகிறது. தமிழின் பெருமையை பற்றி மோடி பேசுகிறார். ஆனால் சமஸ்கிருதத்திற்கே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை எய்ம்ஸுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு அரசு அதற்கான நிலத்தையும் கையகப்படுத்தி ஒப்படைத்து விட்டது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கவில்லை” என பேசினார்.
அதோடு, பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பெருமிதமாக பேசிய பாஜக உறுப்பினர் சி.பி. ஜோஷிக்கு, கனிமொழி கடும் எதிர்ப்பையும் பதிவு செய்தார்.