Delhi Temperature: டெல்லியில் 52.3டிகிரி செல்சியஸ்: கடும் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை
Delhi Temperature: டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் இன்று 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடுமையான வெப்பநிலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் இன்று இதுவரை பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலையாக இன்று 52.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது
டெல்லி வெப்பநிலை:
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள முங்கேஸ்புர் பகுதியில், இதுவரை இல்லாத அளவுக்கு 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை இன்று பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் வெப்ப அலைக்கு மத்தியில் டெல்லியில் மின் தேவை 8,302 மெகாவாட்டை அடைந்ததாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வெப்பநிலை அதிகரித்ததால் டெல்லி குடியிருப்பு வாசிகள், ஏசி-ஐ அதிக நேரம் இயக்கிய நிலையில் மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலைவன மாநிலமான ராஜஸ்தான் பலோடியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக வானிலை மையம் தெரிவித்தது.
சரியும் வெப்பநிலை:
அரபிக்கடலில் இருந்து ஈரமான காற்று ஊடுருவல் காரணமாக தென் ராஜஸ்தான் மாவட்டங்களான பார்மர், ஜோத்பூர், உதய்பூர், சிரோஹி மற்றும் ஜலோர் ஆகிய மாவட்டங்களில் இன்று 4 டிகிரி செல்சியஸ் வரை வீழ்ச்சி பதிவாகியுள்ளது, இது வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை குறைவதற்கான தொடக்கத்தைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
மேலும், வங்காள விரிகுடாவில் இருந்து வியாழக்கிழமை முதல் ஈரமான காற்று ஊடுருவுவதால், உத்தரபிரதேசத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
வானிலை மையம் எச்சரிக்கை:
டெல்லியில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை நிலை நீடிக்கும் என ஐஎம்டி தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக பாதிக்கப்படக்கூடிய மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு வானிலை மையம் மக்களை எச்சரித்துள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, அனைத்து வயதினருக்கும் வெப்பம் தொடர்பான நோய் மற்றும் வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம், மேலும் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு குறிப்பிடத்தக்க உடல்நலக் கவலை உள்ளது. வெப்பம் மற்றும் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.