2G Case: யாரும் எதிர்பார்க்கல.. 2ஜி வழக்கில் ட்விஸ்ட்.. கனிமொழி, ஆ. ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி!
2ஜி வழக்கில் கனிமொழி, ஆ. ராசாவை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் ஒப்புதல்.
2G Case: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகெடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மூத்த தலைவர் கனிமொழியை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று 2ஜி. கடந்த 2014ஆம் ஆண்டு, காங்கிரஸ் தோல்வி அடைவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக 2ஜி ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
2ஜி வழக்கின் பின்னணி:
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றின் உரிமத்தை வழங்கியதாக ஆ. ராசா மீது புகார் எழுந்தது. இதனால், மத்திய அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
இதனால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் முதலீட்டாளர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, யுனிடெக் நிர்வாக இயக்குநர் டி. சஞ்சய் சந்திரா மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் மூன்று முக்கிய நிர்வாகிகள் கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.
டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி:
அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் தவறு நடந்ததாகக் கூறி, கடந்த 2012ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், ஒன்பது நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட122 தொலைத் தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆ. ராசா, கனிமொழி உள்பட 17 பேரை பாட்டியலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்தது. இவர்களை விடுவித்ததற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது சிபிஐ.
கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் 21ஆம் தேதி, மேல்முறையீட்டு மனு மீதான முதல் விசாரணை நடந்தது. கடந்த 6 ஆண்டுகளில், இந்த வழக்கின் விசாரணை 125 முறை நடந்தது. இறுதியாக, கடந்த 14ஆம் தேதி, இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று வழங்கிய தீர்ப்பில், ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்ற ஒப்புதல் வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சர்மா, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.