கட்சி சின்னத்தை முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே மனு - தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்
கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி மனு தாக்கல் செய்தது.
கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி மனு தாக்கல் செய்தது.
மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு அணியாகவும் உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும் சிவசேனா செயல்பட்டு வருகிறது. இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனை கட்சி என கூறி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் சின்னத்தையும் கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில், உத்தவ் தாக்கரே தரப்பு மேல் முறையீடு செய்தது. உத்தவ் தாக்கரே தரப்பின் இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சிவசேனாவின் வில்-அம்பு தேர்தல் சின்னம் மற்றும் பெயரைப் பயன்படுத்துவது குறித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும் என்பது இரு சிவசேனா பிரிவினர் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இருக்கும் என்று நீதிபதி சஞ்சீவ் நருலா கூறினார். இப்பிரச்சினையை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவெடுக்குமாறு தேர்தல் குழுவை கேட்டுக் கொள்கிறேன். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், தற்போதைய மகாராஷ்டிர முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.
சிவசேனாவின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உடனான கருத்து வேறுபாடு காரணமாக தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தார். ஏக்நாத் ஷிண்டே அணி, அஸ்ஸாமில் ஒரு விடுதியில் தங்கியருந்தது. சிவசேனா எவ்வளவோ முயற்சி செய்தும் அதிருப்தி எம்எல்ஏக்கள் மாநிலத்துக்கு திரும்பவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே தரப்பு செய்த முயற்சியும் உச்சநீதிமன்ற உத்தரவால் நிறைவேறாமல் போனது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை திட்டமிட்டப்படி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருந்தது. ஆனால், அதை சந்திக்காமலேயே உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
குஜராத்திலும், பின்னர் அஸ்ஸாமின் குவஹாத்தியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் ஏக்நாத் ஷிண்டேவும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தங்கி இருந்தனர். அதன்பிறகு ஷிண்டே தலைமையிலான அணி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறது. துணை முதலமைச்சராக ஃபட்னவீஸ் பொறுப்பேற்றார்.