தொடர்ந்து சிக்கும் போதைப்பொருள்.. 7 நாளில் ரூ 7,000 கோடி கொக்கைன் பறிமுதல்.. அதிர்ந்து போன டெல்லி!
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள், ஜிபிஎஸ் மூலம் போதைப் பொருள் சப்ளை செய்பவரை டிராக் செய்து, மேற்கு டெல்லியின் ரமேஷ் நகரில் பிடித்தனர்.
தேசிய தலைநகர் டெல்லியில் ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ கோகோயின் போதைப்பொருளை சிறப்புப் பிரிவு அதிகாரிகள் ரமேஷ் நகரில் இன்று பறிமுதல் செய்தனர்.
டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள், ஜிபிஎஸ் மூலம் போதைப் பொருள் சப்ளை செய்பவரை டிராக் செய்து, மேற்கு டெல்லியின் ரமேஷ் நகரில் பிடித்தனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர், லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.
தொடர்ந்து சிக்கும் போதைப்பொருள்:
ஆனால், போலீசார் போதைப்பொருட்களை கைப்பற்றினர். சில நாட்களுக்கு முன்பு, டெல்லி காவல்துறை 5,600 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைனைக் கைப்பற்றியது. அதே கும்பலிடம் இருந்து தற்போது மேலும் போதைப்பொருளை கைப்பற்றி இருக்கிறது.
ஒரு வாரத்தில், 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள, 762 கிலோ போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே வாரத்தில் அதிகப்படியான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம், டெல்லியில் 500 கிலோவுக்கும் அதிகமான கோகோயின் கைப்பற்றப்பட்டது. தெற்கு டெல்லியில் நடந்த சோதனைக்குப் பிறகு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் தொடர்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பிச் செல்ல முயன்ற ஜிதேந்திர பால் சிங் என்ற ஜஸ்ஸி என்பவரை சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அதிரடி காட்டும் அதிகாரிகள்:
எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.
சமீபத்தில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் அருகே பக்ரோடா தொழில்பேட்டையில் போதைப்பொருள் கும்பலை குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அதிகாரிகள் வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய சோதனையின்போது, சுமார் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரோன் (எம்டி) போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.