Crime: திருமணமான பெண்ணுக்கு காதல் டார்ச்சர்.. கல்யாணத்திற்கு மறுத்ததால் கொடூர கொலை - ஓட்டுனர் வெறிச்செயல்
தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காததால் திருமணமான பெண்ணை ஓட்டுனர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக, கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் இம்மாதிரியான கொடூர சம்பவங்கள் தெரிந்த நெருங்கிய நபர்களாலேயே பெரும்பாலான நேரங்களில் நிகழ்கிறது. சமீபத்தில், டெல்லியில் நடந்த கொடூர சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.
தொடரும் கொடூரங்கள்:
லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்காததால் பெண் ஒருவரை 34 வயதான ஓட்டுனர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கிழக்கு டெல்லியின் நியூ அசோக் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷிவ் சங்கர் முகியா என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் பீகாரில் உள்ள மதுபானியில் வசித்து வருகிறார். இவர் வண்டி ஓட்டுநராக பணிபுரிகிறார்.
சம்பவம் குறித்து விவரித்துள்ள காவல்துறை தரப்பு, "அவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். முகியா தற்போது சிராக் டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பணிப்பெண்ணாக பணிபுரிகிறார். பிப்ரவரி 26ஆம் தேதி, கொலைச் சம்பவம் குறித்த தகவல் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. அங்கு 30 வயதுடைய பெண்ணின் சடலம் தரையில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி:
பிரேத பரிசோதனை அறிக்கையில், உயிரிழந்த பெண்ணின் தலையில் காயங்கள் மற்றும் அவரது வாயில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, மூச்சு விட முடியாமல் உயிரிழந்தார். விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் ஒருவர், டாக்சி டிரைவர் ஒருவர் உயிரிழந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். ஆனால், உயிரிழந்தவரின் நண்பர் அந்த நபரை சந்திக்கவும் இல்லை. அவரது படத்தை பார்த்ததும் இல்லை.
அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகப்படும்படியாக நடந்து கொண்ட ஒருவரை கண்டனர். இரவு 7.13 மணிக்கு அங்கு நுழைந்து 7.27 மணிக்கு வெளியே வருவதைக் கண்டார்" என தெரிவித்தது.
இதில், கவனிக்கத்தக்கது என்னவென்றால், அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. மனைவியை விட்டு சென்றுவிடுமாறு அவரின் கணவரை முகியா மிரட்டியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நொய்டாவில் ஒரு நண்பர் மூலம் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டதாக முகியா விசாரணையில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். எனவே, அவரிடம் பேசி திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த பெண் ஒப்பு கொள்ளவில்லை. இந்த சூழலில் அந்த பெண்ணை முகியா கொலை செய்துள்ளார்.