(Source: ECI/ABP News/ABP Majha)
நாடாளுமன்றத்தில் தர்ணா செய்யக்கூடாது… பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளை தொடர்ந்து புதிய சுற்றறிக்கை!
நாடாளுமன்ற வளாகத்திற்குள் என்னென்ன செய்யக்கூடாது என்று சுற்றறிக்கை கூறுகிறது. அதில் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, எம்.பி.க்கள் உண்ணாவிரதம், தர்ணா, செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ந்தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற செயலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே, அவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அதாவது அன்பார்லிமென்ட்டரி வேர்ட்ஸ் என அன்றாடம் உபயோகிக்கப்படும் பல வார்த்தைகளுக்க தடை விதிக்கப்பட்டு சர்சையான நிலையில், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் தர்னா, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்
ஓரிரு தினம் முன்பு மக்களவை செயலகம் வெளியிட்ட சிறிய புத்தகம் போன்ற அறிக்கையில், அராஜகவாதி, கண்துடைப்பு, வெட்கப்படுதல், பாலியல் தொல்லை, ரவுடித்தனம், லாலிபாப், கழுதை, குண்டர்கள், முதலைக் கண்ணீர், கோழை, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, சகுனி, இரட்டை வேடம், குழந்தைத்தனம், கிரிமினல், போலித்தனம், துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், நாடகம், திறமையற்ற, முட்டாள்தனம், போன்ற வார்த்தைகளை பார்லிமெண்டில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்து இருந்தது. பாராளுமன்றத்தில் சில வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக “காக் ஆர்டர்” தொடர்பாக எதிர்க்கட்சிகளின் சீற்றத்திற்கு மத்தியில் தற்போது, தர்ணாக்கள் குறித்த சுற்றறிக்கை வந்துள்ளது.
தர்ணா கூடாது
இதுதொடர்பாக நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் பி.சி.மோடி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் என்னென்ன செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். அதில் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது, எம்.பி.க்கள் உண்ணாவிரதம், தர்ணா, வேலை நிறுத்தங்கள் செய்யக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்பான ஒத்துழைப்பைக் கோருகிறோம் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு
ஆண்டாண்டு காலமாக எதிர்க்கட்சியினர் ஆளும் அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்திசிலை முன்பு அமர்ந்து தர்ணா செய்வதும், ஆர்ப்பாட்டம் நடத்துவம் ஜனநாயக ரீதியிலான செயலாக செய்யப்பட்டு வருகிறது. அரசுக்கு எதிரான தம் நிலைப்பாட்டை தெரிவிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக வழக்கம். இதற்கும் மத்திய பாஜக அரசு தற்போது தடை விதித்துள்ளது. இந்த செய்தி எதிர்க்கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்