Data Protection Bill: தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல்… மீறல்களை நிறுவனங்கள் தாமாக முன்வந்து ஒப்புகொள்ளலாம்… சட்ட அமைப்புகளின் சுமையை குறைக்கிறதா?
இந்த சட்டம் பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 'plea bargain' முறைக்கு ஒத்ததாக உள்ளது. நிறுவனங்கள் ஏதேனும் ஒரு வகை மீறலை முன் வந்து ஒப்புக்கொள்ளலாம், அதன் பின் அதற்கு தண்டனையாக தேவையான தொகையை செலுத்தலாம்
மத்திய அமைச்சரவை புதன்கிழமை டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு (டிபிடிபி) ஒப்புதல் அளித்துள்ளது, இது நிறுவனங்களின் தரவு மீறல்களை தானாக முன்வந்து ஒப்புக்கொள்வதற்கு வழி வகுக்கும், அதே நேரத்தில் 'alternate dispute resolution mechanism (மாற்று தகராறு தீர்க்கும் பொறிமுறையை)'யும் வழங்குகிறது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தரவு மீறல்களை தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ளுதல்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) இந்த மசோதாவை வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. "தானாக முன்வந்து ஒப்புக்கொள்ளும் பொறிமுறையானது, பல நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட நடைமுறையான 'plea bargain' (மனு பேரம்) முறைக்கு ஒத்ததாக உள்ளது" என்று ஒரு அதிகாரி கூறினார். "நிறுவனங்கள் ஏதேனும் ஒரு வகை மீறலை முன் வந்து ஒப்புக்கொள்ளலாம், அதன் பின் அதற்கு தண்டனையாக தேவையான தொகையை செலுத்தலாம்," என்று மேலும் கூறினார். கடந்த நவம்பரில், 21,000க்கும் மேற்பட்ட பங்குதாரர்களின் கருத்துகளைப் பெற்று, பொது ஆலோசனைக்காக டிபிடிபி மசோதாவின் வரைவை MEITY வெளியிட்டது. இது சுமார் 100 அமைப்புகளுடன் கலந்தாலோசித்து எடுத்த முடிவென்றும், அதில் 48 அரசு சாரா பங்குதாரர்கள் என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.
எவ்வளவு அபராதம்?
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வரைவு முந்தைய பதிப்புகளில் உள்ள தரவு மீறல்களுக்கான பெரும்பாலான குற்றவியல் விதிகளை நீக்கியுள்ளது. இருப்பினும், விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க தரவு பாதுகாப்பு வாரியத்திற்கு (DPB) அதிகாரம் அளிக்கிறது. தேவையான அமைச்சரவை ஒப்புதலுடன் அத்தகைய அபராதங்களை அதிகபட்சமாக ரூ.500 கோடி வரை அதிகரிக்கலாம். இத்தகைய உயர்வுகளுக்கு சட்டத்தில் எந்த திருத்தமும் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைன் பாதுகாப்பு
தொழில்துறை வல்லுனர்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வரையறையைத் தக்கவைக்க தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்துள்ளது. "ஆன்லைனில் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும், குழந்தைகள் உட்பட, டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆட்சிமுறை அமலுக்கு வருவதற்கு முன்பு சேகரிக்கப்பட்ட தரவை நீக்குமாறு தரவு அதிபர்கள் நிறுவனங்களைக் கோரலாம்.
சட்ட அமைப்புகளின் சுமையை குறைக்க
சட்ட அமைப்புகளின் சுமையைக் குறைக்கும் முயற்சியாக 'தன்னார்வ வெளிப்படுத்தல் பொறிமுறை'யில் முன்மொழியப்பட்ட மாற்றங்களைக் குறிப்பிடும் அதிகாரிகள், ' தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டு, அபராதங்களை செலுத்துத்துவது என்பது, DPDP மசோதாவின் கீழ் மற்ற சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் நிறுவனங்களை விடுவிக்காது' என்று கூறினர். மாற்று தகராறு தீர்வு (ஏடிஆர்) பொறிமுறையின் கீழ் அரசாங்கம் சில விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இரு தரப்பினரும் தங்கள் புகார்களை ஒரு மத்தியஸ்தரின் உதவியுடன் தீர்க்க அனுமதிக்கும். "டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை நாங்கள் வரவேற்கிறோம். பங்குதாரர்களிடையே அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனை செயல்முறை முன்மாதிரியானது," என்று தொழில்துறை அமைப்பான நாஸ்காம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. இந்த மசோதா சட்டமாக நிறைவேறியதும், தனிநபர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தரவுகள், அது செயலாக்கப்படும் முறைகள் மற்றும் அத்தகைய தரவு சேமிக்கப்படும் இடம் ஆகியவற்றின் விவரங்கள் குறித்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் உரிமையும் தனிநபர்களுக்கு இருக்கும் என அந்த அதிகாரி கூறினார்.