Danish royal family: தமிழ்நாடு வரும் டென்மார்க் நாட்டின் இளவரசர் குடும்பம் - ஏற்பாடு பணிகள் தீவிரம்
டென்மார்க் நாட்டின் அரச குடும்பம் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டென்மார்க் நாட்டின் அரச குடும்பம் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்திய துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கார் அழைப்பின் பேரில் டென்மார்க் அரச குடும்பத்தினர் வருகை தருகின்றனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதுதொடர்பான தகவல்களை இந்தியாவுக்கான டென்மார்க் தூதர் பிரெட்டி ஸ்வானே தெரிவித்துள்ளார். அதில் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி டென்மார்க் நாட்டின் இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன், இளவரசி மேரி எலிசபெத் ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், “மார்ச் 2 ஆம் தேதி வரை கிட்டதட்ட 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இருவரும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் செல்கின்றனர். மேலும் முன்பே வெளியான அறிவிப்பின்படி, பசுமை சக்தி, ஆற்றல் பரிமாற்றம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் நாங்கள் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்தியாவில் டென்மார்க் நாட்டின் நிறுவனங்களின் முதலீட்டுக்கு ஏற்ற இடமாக தமிழகம் திகழ்கிறது. ஏற்கனவே நிறைய டென்மார்க் நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கி வருகின்றது. அதில் குறிப்பிடும் வகையில் ஆற்றல் பிரிவில் நிறைய செயல்பட்டு வருகின்றது. இதில் காற்றாலைக்கான சர்வதேச அளவிலான விநியோக பிரிவிலும் ஈடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் இருந்து தான் காற்றாலைக்கான இயந்திரங்கள், தட்டுகள், கேபிள்கள் உட்பட எவையெல்லாம் தேவைப்படுகிறதோ அவை அனைத்தும் உற்பத்தி செய்யப்படுகின்றது” எனவும் பிரெட்டி ஸ்வானே கூறியுள்ளார்.
எனவே இளவரசர் பிரடெரிக் ஆந்திரே ஹென்ரிக் கிறிஸ்டியன், இளவரசி மேரி எலிசபெத்துடன், டென்மார்க் அமைச்சர்கள், நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளும் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர். டென்மார்க் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 2003 ஆம் ஆண்டு டென்மார்க் இளவரசர் வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.