Corona: இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை... தயார் நிலையில் மருத்துவமனைகள்..!
கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் உள்ளோமா? என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் இன்று கொரோனா தடுப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி ஓய்ந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சுகாதார ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று பரவல்
2020ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்துதல் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடுத்து கொரோனாவின் தாக்கம் ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில் தற்போது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் வீரியமெடுக்கும் கொரோனா, மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. சீனாவில் உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று முழு வீரியத்துடன் தற்போது பரவி வருகிறது. முன்னதாக இந்தியாவில் குஜராத், ஒடிசா மாநிலங்களிலும் இந்த உருமாறிய பிஎஃப் 7 கொரோனா தொற்று பரவியது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகை
இதனையடுத்து இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்தால் அதை கையாளும் வகையில் தயார் நிலையில் உள்ளோமா என்பதை உறுதி செய்ய சுகாதார மையங்களில் சுகாதார ஒத்திகை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் இன்று சுகாதார மையங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது.
சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா? நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா? உள்ளிட்ட விஷயங்கள் இந்த சுகாதார ஒத்திகையில் கவனத்தில் கொள்ளப்படும்.
இந்தியாவில் முன்னதாக ஏற்பட்ட கொரோனா அலைகள், குறிப்பாக இரண்டாம் கொரோனா அலை, மருத்துவ சுகாதார கட்டமைப்பை உலுக்கி எடுத்தது. மருத்துவமனைகளில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாததால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். தங்களின் உறவினர்களுக்காக படுக்கைகளை தேடி அலைந்த சம்பவம் எல்லாம் நடந்தது.
சுகாதார நடவடிக்கைகள் அவசியம்
முன்னதாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதிய கடிதத்தில், "அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் அவசரநிலையை சமாளிக்க தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். எனவே, வரும் டிசம்பர் 27ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள அனைத்து சுகாதார மையங்களிலும் (அடையாளம் காணப்பட்ட கோவிட்-அர்ப்பணிப்பு சுகாதார வசதிகள் உட்பட) ஒத்திகை பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புவியியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார மையங்களில் போதுமான படுக்கைகள் இருக்கிறதா? குறிப்பாக தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதி கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், ICU படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் வசதி கொண்ட படுக்கைகள் ஆகியவை இருக்கிறதா? என்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
பரிசோதனை:
இந்தப் பயற்சி ஒத்திகையில் நிலைமையை எதிர்கொள்ள தேவையான மனித வளம் இருக்கிறதா? அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயுஷ் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனரா ஆகியவையும் கவனத்தில் எடுத்து கொள்ளப்பட வேண்டும்" என்று எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஸிஜனை சப்ளை செய்வதற்கான தளவாடங்கள் இருக்கின்றனவா என்பது உறுதி செய்யப்படும். ஆர்டி-பிசிஆர் மற்றும் ரேபிட் ஆன்டிஜென் கிட்கள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் கோவிட் சோதனை திறன்களை அதிகரிப்பதையும் இந்த பயிற்சி ஒத்திகை நோக்கமாகக் கொண்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.