Covid 19: “சம்மதம் இருந்தால் மட்டுமே கொரோனா தடுப்பூசி; கட்டாயமில்லை” - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
தனிநபர் சம்மதத்துடன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை - மத்திய அரசு
தனிநபர் சம்மதத்துடன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாகவும், கட்டாயம் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக எந்த வழிகாட்டு விதிமுறைகளும் வெளியிடப்பட வில்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவது மற்றும் சான்றிதழ் பெறுவதில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சனைகளை குறித்து மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென Evara Foundation என்ற அரசு சாரா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில், பதில்மனுத் தாக்கல் செய்த மத்திய அரசு, "தனிநபர் சம்மதத்துடன் தான் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கட்டாயம் தடுப்பூசியை செலுத்துவது தொடர்பாக எந்த வழிகாட்டு விதிமுறைகளும் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட வில்லை.
தற்போது, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கும், முதல்தவணை மட்டும் செலுத்தி, இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்களை ஊக்குவிப்பதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன" என்று தெரிவித்தது.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை மூலம் கோவின் இணையளத்தில் பதிவு செய்யலாம் என்று மாநிலங்களுக்கு கடந்தாண்டு ஜூன் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதியது. அதில், மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையில் பெயர், பிறந்த தேதி, பாலினம், போட்டோ உட்பட தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளதாகவும், கோவிட் தடுப்பூசி பதிவுக்கு இதை பயன்படுத்தலாம்" என தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, அனுமதிக்கப்பட்ட போட்டோ அடையாள அட்டையாக பயன்படுத்துவற்கு விரிவாக விளம்பரப்படுத்தும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, பொது இடங்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் எனவும் அதற்கான சான்றிழ்கள் இருந்தால் மட்டுமே பொதுஇடங்களுக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 39 லட்சத்துக்கும் அதிகமாக (39,46,348) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 157.20 கோடியைக் (1,57,20,41,825) கடந்தது. 1,68,75,217 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 13.79 கோடிக்கும் மேற்பட்ட (13,79,62,181) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.