4 வயது மகனை கொன்று, தற்கொலை செய்துகொண்ட பெற்றோர், கேரளாவில் அதிர்ச்சி.. நடந்தது என்ன?
கேரளாவில் மகனை கொன்று விட்டு கணவன், மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் தன் சொந்த மகனை கொன்று விட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சுனில் என்பவரின் மனைவி கிருஷ்ணேந்து. இவர்களுக்கு 4 வயதில் ஆதவ கிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். சுனில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சுனிலின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் அவரது பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் அங்கு சென்று கதவை தட்ட முயன்றபோது கதவு தானாக திறந்து கொண்டது.
உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். வீட்டிற்குள் உள்ள அறையில் சிறுவன் ஆதவ கிருஷ்ணன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தான். அதற்கு அடுத்த அறையில் சுனிலும் அவரது மனைவி கிருஷ்ணேந்துவும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்து சுனிலின் பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து பரவூர் போலீசாருக்கு சுனிலின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் முதலில் மகனை கொலை செய்து விட்டு பின்னர் அவர்கள் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நான்கு வயது மகனை கொன்று விட்டு பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சந்தேகிப்பது போல தனது குழந்தையை தாமே கொல்லும் அளவுக்கு அவர்களுக்கு என்ன பிரச்சனை இருந்தது, அதற்கான தைரியம் எப்படி வந்தது என்பது போன்ற கேள்விகள் பலரிடத்திலும் சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

