டெல்லிக்கு அச்சுறுத்தல்.... 300க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22, 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனாலும் முழு ஊரடங்கு கிடையாது என்று அம் மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் டெல்லி காவல்துறையை சேர்ந்த மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட 300 க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணாமாக பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். டெல்லி காவல் துறை தலைமை அலுவலகம் உள்பட அங்கு உள்ள அனைத்து பிரிவு காவல் நிலையங்களிலும் ஏராளமான காவல் பணியாளர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் புதிதாக 22,751 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. இது கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதிக்குப் பிறகு அதிகம் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,179 பேர் கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்து உள்ளனர்.
கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, நேரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லியை பொறுத்தவரை கொரோனா பரவல் காரணமாக Graded Response Action Plan -இன் கீழ் டெல்லி முழுவதும் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடம், கேளிக்கை பூங்காக்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்துகள், மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் பயணிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சினிமா தியேட்டர்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகள் மூடப்பட வேண்டும். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்கும் கடைகள் மாற்று நாட்களில் திறக்கப்பட வேண்டும். மால்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி, வெள்ளி இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை வார இறுதி நாட்கள் ஊரடங்கு என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )