UP Etawah Safari Park: இரு பெண் சிங்கங்களுக்கு கொரோனா; ஐதராபாத்தை தொடர்ந்து உ.பி.,யில் கவலை
ஐதராபாத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு பெண் சிங்கங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள எத்வா சபாரி பூங்காவில் இரண்டு பெண் சிங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
மேலும், தொற்று பரலவை கட்டுப்படுத்த சில மாநிலங்களில் இரவு நேரம் மற்றும் பகுதி நேர ஊரடங்கு, ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பாதிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பரவி வருகிறது. சமீபத்தில், ஐதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 ஆசிய சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டது.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் எத்வாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கங்கள் சரணாலயத்தில் உள்ள 14 சிங்கங்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், இரண்டு பெண் சிங்கங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தத். இதையடுத்து, அந்த சிங்கங்கள் மற்ற சிங்கங்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், உயிரியல் பூங்காக்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.