போலீசால் மதுவை கீழே ஊற்றிய வெளிநாட்டு பயணி! சிஎம் பார்வை வரை சென்ற சின்ன மேட்டர்!
ஸ்வீடன் நாட்டு பயணியை மதுபாட்டில்களில் உள்ள மதுவை கீழே ஊற்ற வைத்த கேரள காவல்துறையைச் சேர்ந்த எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும், இந்தியாவிற்குள்ளே சுற்றுலா செல்ல விரும்பும் நபர்களுக்கு முதன்மை தேர்வாக கேரளா மாநிலம் உள்ளது. கேரளாவிற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் சுற்றுலாவிற்கு வருவது வழக்கம். சில வெளிநாட்டினர் கேரளாவிலே வசித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள வெள்ளார் அருகே உள்ள வட்டப்பாராவில் அஸ்பெர்க் என்பவர் விடுதி ஒன்றில் தங்கி வருகிறார். இவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த விடுதியில் தங்கி வருகிறார். இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அஸ்பெர்க் நேற்று அங்குள்ள மதுபான விடுதி ஒன்றில் வெளிநாட்டு மதுபான வகை பாட்டில்கள் மூன்றை வாங்கி தனது விடுதிக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது, அவர் கோவளம் கடற்கரையில் தற்கொலை பாயிண்ட் அருகே சென்று கொண்டிருந்தபோது கோவளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஸ்கூட்டியில் சென்ற அஸ்பெர்க்கிடம் போலீசார் பரிசோதனை நடத்தியதில் அவரிடம் மூன்று மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்தனர். அதற்கான ரசீதை போலீசார் கேட்டுள்ளனர். அஸ்பெர்க் தனக்கு ரசீது அளிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இதனால், மதுபாட்டில்களில் உள்ள மதுவை தூக்கி எறியும்படி போலீசார் அஸ்பெர்க்கை வலியுறுத்தியுள்ளனர். தான் ரசீதை சென்று வாங்கி வருவதாக ஸ்வீடன் நாட்டின் அஸ்பெர்க் போலீசிடம் தெரிவித்துள்ளார். ஆனாலும், அதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் பாட்டிலை தூக்கி எறியுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து, அஸ்பெர்க் பாட்டிலை தூக்கி எறியாமல் அதில் இருந்த மதுவை கீழே ஊற்றினார்.
இவையனைத்தையும் அங்கே இருந்த நபர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோவில் போலீசார் நடந்து கொண்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. சுற்றுலாவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் கேரளாவில் வெளிநாட்டு பயணிக்கு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததையடுத்து முதல்வர் பினராயி விஜயனின் கவனத்திற்கு இந்த நிகழ்வு சென்றது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, 68 வயதான ஸ்டீபன் அஸ்பெர்க்கிடம் இவ்வாறு நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் முகமது ரியாஸ், இந்த சம்பவம் துரதிஷ்டவசமானது. இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை தடுக்கும் பிம்பத்தை உருவாக்கும். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட துறை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்