"பாதுகாப்பு படைகளா? பாஜகவின் அரசியல் ஊழியர்களா?" - பாஜகவை சாடும் காங்கிரஸ் தலைவர் கார்கே
மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், கடந்த 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை நாட்டில் உள்ள 765 மாவட்டங்களுக்கு சென்று மக்களிடம் விளக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இன்னும் 5 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் அதிரடி உத்தரவு:
அதன் ஒரு பகுதியாக, கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, பாஜக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, இணைய செயலாளர்கள், பொதுத் துறை நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்பட மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், கடந்த 9 ஆண்டுகளாக செய்த சாதனைகளை நாட்டில் உள்ள 765 மாவட்டங்களுக்கு சென்று மக்களிடம் விளக்க வேண்டும் என உத்தரவிட்டது.
மத்திய அரசின் இந்த உத்தரவை கடுமையாக சாடியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதிகாரிகளையும் பாதுகாப்பு படைகளையும் மத்திய அரசு அரசியல் மயப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "அரசாங்கத்தின் ஏஜென்சிகள், நிறுவனங்கள், பிரிவுகள், துறைகள் என அனைத்தையும் மோடி அரசு இப்போது அதிகாரப்பூர்வ பிரச்சாரர்களாக பார்க்கிறது. இது மத்திய குடிமைப் பணிகள் (நடத்தை) விதிகள், 1964ஆ தெளிவான மீறுகிறது. எந்த ஒரு அரசு ஊழியரும் எந்த வித அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக் கூடாது என்பதற்கு எதிராக உள்ளது.
வெளுத்து வாங்கிய காங்கிரஸ் தலைவர்:
அரசின் திட்டங்கள் தொடர்பான தகவல்களை அரசாங்க அதிகாரிகள் பரப்புவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றாலும், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என சொல்வது அவர்களை ஆளும் கட்சியின் அரசியல் ஊழியர்களாக மாற்றுகிறது.
தேசத்தைக் காக்க ராணுவ வீரர்களை தயார்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய ராணுவப் பயிற்சி மையம், அரசாங்கத் திட்டங்களை விளம்பரம் செய்யும் நோக்கில் நாடகங்கள் மற்றும் திட்டங்களை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது. ஜனநாயகத்தில் பாதுகாப்பு படைகளை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பது மிகவும் முக்கியமானது.
ஒவ்வொரு ராணுவ வீரரின் விசுவாசமும் தேசத்தின் மீதும் அரசியலமைப்பின் மீதும் இருக்க வேண்டும். நமது ராணுவ வீரர்களை அரசு திட்டங்களின் விளம்பர முகவர்களாக மாற்றுவது பாதுகாப்பு படையை அரசியல் மயமாக்குவதற்கான ஆபத்தான நடவடிக்கையாகும். தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், நாட்டுக்கு தொடர்ந்து சேவை செய்வதற்கான ஆற்றலை மீட்டெடுக்கவும் ராணுவ வீரர்களுக்கு வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. அரசியல் நோக்கங்களுக்காக அவர்களின் விடுப்பை பறிக்கக்கூடாது.
நமது ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்கும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படைகளை அரசியலாக்குவதற்கு வழிவகுக்கும் உத்தரவுகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டியது அவசியம்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, "அடித்தட்டு மக்களை அரசு ஊழியர்கள் சென்று சந்திப்பதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் நோக்கமாகும். இது காங்கிரஸ் கட்சிக்கு அந்நியமான கருத்தாக இருக்கலாம். ஆனால், பொது மக்களுக்கு சேவை செய்வது அரசாங்கத்தின் கடமை" என தெரிவித்துள்ளார்.