டெல்லியில் காற்றின் தரம் உயரும் வரை பள்ளிகளை மூடலாம்.. வலியுறுத்தும் குழந்தைகளுக்கான அமைப்பு
டெல்லியில் காற்றின் தரம் உயரும் வரை பள்ளிகளை மூடலாம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், பாஜகவும் வலியுறுத்தியுள்ளன.
டெல்லியில் காற்றின் தரம் உயரும் வரை பள்ளிகளை மூடலாம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும், பாஜகவும் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக ட்விட்டரில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு ரொம்ப அவசியம். டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ளது. டெல்லி அரசு இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளிகளில் அவர்கள் நச்சுக் காற்றின் ஊடே இருக்க வேண்டியுள்ளது. இந்த அலட்சியம் தவறானது. அதனால் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதை கவனத்தில் கொள்கிறது என்று பதிவிட்டுள்ளது.
இதற்கிடையில் டெல்லி பாஜக தலைவர் அதீஷ் குப்தா, மாநில துணைநிலை ஆளுநர் விகே சக்ஸேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பள்ளிகளை மூடிவிட்டு ஆன்லைனில் வகுப்பு எடுக்க அறிவுறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (நவ.2) காலையில் காற்று மாசு 354 என்றளவில் இருந்தது. நொய்டாவில் 406 என்ற மிக அபாயகரமான அளவில் இருந்தது. நேற்று வடமேற்கு டெல்லியில் காற்று மாசு 571 என்ற கொடூரமான அளவில் இருந்தது.
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பான காற்றின் மாசு அளவை விட சுமார் 10 மடங்கு அதிகமாக மாசடைந்துள்ளது டெல்லி நகரம். இதன் PM 2.5 அளவு சுமார் 107.6 என அளவிடப்பட்டுள்ளது. PM 2.5 என்பது நுரையீரலிலும், பிற உறுப்புகளிலும் காற்று மூலமாக நுழையும் சிறிய துகள்கள் ஆகும். இவை நச்சுத்தன்மை கொண்டவை.
அதிகப்படியான காற்று மாசு காரணமாக குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படு. அதாவது கருவுற்று இருக்கும் பெண்கள் மாசு அடைந்த காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்குள் வளரும் குழந்தையை அது நேரடியாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது அந்த குழந்தையின் மூளை வளர்ச்சியில் சில தடைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
காற்றின் தரம் எப்படி கணக்கிடப்படுகிறது:
காற்றின் தரத்தை அளக்கும் அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது
உலகிலேயே காற்று மாசு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது டெல்லி. உலகிலேயே அதிக மாசடைந்த இடமாக இந்தியாவின் கங்கை சமவெளி கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல் மேற்கு வங்கம் வரையிலான பகுதியில் வாழும் சுமார் 50 கோடி மக்கள் இதே மாசுபட்ட சூழலில் வாழ்ந்தால் சராசரியாக தங்கள் ஆயுளில் இருந்து சுமார் 7.6 ஆண்டுளை இழக்க நேரிடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
புகைபிடிக்கும் பழக்கம் மூலமாக 1.5 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சுமார் 1.8 ஆண்டுகள் ஆயுள் குறையும் எனவும் கூறப்பட்டிருந்த நிலையில், இவற்றை விட ஆபத்தான ஒன்றாக மாறியிருக்கிறது காற்றுமாசு. உலகிலேயே அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. முதலிடத்தை வங்காளதேசம் பிடித்துள்ளது.