(Source: ECI/ABP News/ABP Majha)
சாதாரண மக்களின் வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லையா? வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கு தலைமை நீதிபதி பதில்
பொது நலன் சாராத அரசியல் சாசன விவகாரங்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாகவும் எளிய மக்களின் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதில்லை என்றும் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை எந்த ஒரு சமூகத்திற்கும் இன்றியமையாத ஒன்று. இதன் முக்கியத்துவத்தை அறிந்தே, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசியல் சாசசனத்தின் முகவுரையில் இந்த வார்த்தைகளை குறிப்பிட்டனர். எளிய மக்களுக்கு நீதி வழங்குவது ஜனநாயக நாட்டின் முதல் நோக்கமாகும்.
அந்த வகையில், இந்தியாவில் எளிய மக்களுக்கான நீதியை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது நீதிமன்றங்கள். குறிப்பாக, உச்சபட்ச அதிகாரங்களை கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், பல்வேறு முக்கிய வழக்குகளில் எளிய மக்களுக்கான நீதியை பறைசாற்றியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மீது வழக்கறிஞர் சரமாரி குற்றச்சாட்டு:
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மீது வழக்கறிஞர் ஒருவர் சரமாரி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். பொது நலன் சாராத அரசியல் சாசன விவகாரங்களை மட்டுமே உச்ச நீதிமன்றம் விசாரிப்பதாகவும் எளிய மக்களின் வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதில்லை என
வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாறை உச்ச நீதிமன்றத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், "தேசத்தின் குரலை கேட்டு வருகிறோம். சட்டப்பிரிவு 370 ரத்து விவகாரத்தில் காஷ்மீரைச் சேர்ந்த தனி நபர்களிடம் அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து வருகிறோம்" என பதில் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நெடும்பாறை அவர்களே, உங்களிடம் வாக்குவாதம் மேற்கொள்ள விருப்பம் இல்லை. ஆனால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு எழுதிய மின்னஞ்சலில், அரசியல் சாசன விவகாரங்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும், அரசியல் சாசனம் அல்லாத வழக்குகளை மட்டுமே விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமைச் செயலர் என்னிடம் கூறினார்" என்றார்.
பொறுப்பாக பதில் அளித்த இந்திய தலைமை நீதிபதி:
இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் நெடும்பாறை, உச்ச நீதிமன்றத்திற்கு மெயில் அனுப்பியது உண்மை என்றும் அரசியல் சாசனம் தொடர்பில்லாத வழக்குகள் என்றால் சாதாரண எளிய மக்களின் வழக்கு என விளக்கம் அளித்தார்.
இதை தொடர்ந்து, அரசியல் சாசன விவகாரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "அரசியல் சாசன விவகாரங்கள் என்றால் என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியவில்லை என்பதை கூற விரும்புகிறேன். அரசியல் சாசன விவகாரங்களின் முக்கியத்துவம் பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை என தெரிகிறது. அரசியலமைப்பை விளக்குவதே அதன் நோக்கம். இந்தியாவில் சட்ட கட்டமைப்பின் அடித்தளமே அரசியலமைப்புதான்.
நீங்கள் சட்டப்பிரிவு 370ஐ பற்றி நினைக்கலாம். அந்த விஷயம் சம்பந்தம் இல்லாத ஒன்று என நினைக்கலாம். ஆனால், அரசோ அல்லது அந்த வழக்கில் மனுதாரர்களோ அப்படி உணரவில்லை என்று நான் நினைக்கிறேன். சட்டப்பிரிவு 370 விவகாரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வந்து எங்களுக்கு வாக்குமூலம் அளித்துவிட்டு சென்றார்கள். எனவே, நாங்கள் தேசத்தின் குரலைக் கேட்டு வருகிறோம். சமீபத்தில் விசாரிக்கப்பட்ட அரசியல் சாசன விவகாரம், நாடு முழுவதும் உள்ள ஏராளமான ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என பதில் அளித்தார்.