Rover landing: கண்கொள்ளா காட்சி..! சந்திரயான் 3 லேண்டரிலிருந்து ரோவர் தரையிறங்கும் வீடியோ.. இஸ்ரோ வெளியீடு
சந்திரயான் 3 லேண்டரிலிருந்து ரோவர் தரையிறங்கும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3 லேண்டரிலிருந்து ரோவர் தரையிறங்கும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ வெளியீடு:
நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்திலின் விக்ரம் லேண்டரிலிருந்து, பிரக்யான் ரோவர் வெளியேறும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
... ... and here is how the Chandrayaan-3 Rover ramped down from the Lander to the Lunar surface. pic.twitter.com/nEU8s1At0W
— ISRO (@isro) August 25, 2023
கடந்த 23ம் தேதியன்று எடுக்கப்பட்ட அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலகியுள்ளது. லேண்டர் நிலவில் தரையிறங்கியது முதலே நிலவின் மேற்பரப்பு தொடர்பான புகைப்படம், தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு தொடர்பான விடியோ என பல்வேறு தகவல்களை இஸ்ரோ அடுத்தடுத்து வழங்கி வருகிறது. இந்நிலையில் தான், லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் எப்படி வெளியே வந்து நிலவில் தடம் பதித்தது என்பது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
சந்திரயான் 3 திட்டம்:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்டது தான் சந்திரயான் 3 விண்கலம். கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்தது. பின்பு நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டது.
சரித்திர நிகழ்வு:
40 நாட்கள் பயணத்தை தொடர்ந்து கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணியளவில், திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன் மூலம் நிலவின் வெற்றிகரமாக தடம்பதித்த நான்காவது நாடு மற்றும் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.
தரையிறங்கிய ரோவர்:
இதனிடையே விக்ரம் லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்குப் பிறகு, அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் வெளியேறியது. அதுதொடர்பான காட்சிகளை தான் இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. 6 சக்கரம் கொண்ட 26 கிலோ எடையிலான இந்த ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக பல்வேறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ரோவரின் ஆய்வு நாட்கள் 14 நாட்கள் ஆகும். இந்த ரோவர் நிலவில் சுமார் 100 மீட்டர் முதல் 500 மீட்டர் வரை செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நொடிக்கு ஒரு சென்டி மீட்டர் தூரம் அளவிற்கு மட்டுமே இந்த ரோவர் பயணிக்கும். அப்போது நிலவில் உள்ள நீராதாரம், கனிம வளங்கள், நிலவின் அமைப்பு, தோற்றம் மற்றும் நிலவின் வளிமண்டலம் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆராயப்பட உள்ளன.