Chandrayaan-3: எல்லாம் தயார்..! இன்று நிகழப்போகும் மேஜிக்.. நிலவில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்.. சாதிக்கப்போகும் சந்திராயன் 3..!
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி இன்று மாலை நிலவில் தரையிறங்க உள்ளது.
சந்திரயான் 3:
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால், விண்ணில் செலுத்தப்பட்டது தான் சந்திரயான் 3 விண்கலம். கடந்த ஜுலை மாதம் 14ம் தேதி இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. தற்போதைய சூழலில் நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று தரையிறக்கம்:
40 நாட்கள் பயணத்தை தொடர்ந்து இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளதாக ஸ்ரோ தெரிவித்துள்ளது. 25 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து நிகழ உள்ள இந்த தரையிறக்கம் என்பது, வெறும் 15 நிமிடங்களில் முடிய உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிடட்ட டிவிட்டர் பதிவில், நிலவின் தென் துருவத்தை ஆராயும் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி, திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது.
வழக்கம்போல் அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. லேண்டரை தரையிறக்கும் பணி எந்த பிரச்னையும் இன்றி தொடர்கிறது. சந்திரயான் 3 திட்டம் உற்சாகத்துடன் தொடர்ந்து வருகிறது. லேண்டர் தரையிறங்கும் நிகழ்வின் நேரலை இன்று மாலை 5.20 மணிக்கு தொடரும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இன்று தரையிறங்க உள்ளதை காண ஒட்டுமொத்த நாடுமே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
பிரதமர் மோடிக்கு சிறப்பு ஏற்பாடு:
தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். அவரும் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை நேரடியாக காணொலி மூலம் காண, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலக்கு:
திட்டமிட்டபடி, விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு விட்டால், நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிடைக்கும். அதோடு, நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கிய நான்காவது நாடு எனும் பெருமையும் இந்தியாவிற்கு கிடைக்கும். அந்த ரோவர் நடத்த உள்ள ஆய்வுகள் மூலம் நிலவின் அமைப்பு, அதில் உள்ள கனிமங்கள், நிலவின் வளிமண்டலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக, மனித இனம் இதுவரை அறிந்திடாத பல்வேறு ரகசியங்களை அறிந்திட முடியும்.
மாற்று திட்டம்:
அதேநேரம், லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து சூழல்களும் சாதகமாக உள்ளனவா என்பது குறித்து, சுமார் 4 மணியளவில் இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் சோதனை நடத்துவர். அதில் அனைத்தும் சரியாக அமைந்தால் திட்டமிட்டபடி இன்றே விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படும். ஒருவேளை ஏதேனும் சிக்கல் இருந்தால், வரும் 27ம் தேதி லேண்டரை தரையிறக்கும் மாற்று திட்டமும் தயார் நிலையில் உள்ளது. அவ்வாறு நடந்தால், நிலவின் மேற்பரப்பில் 14 நாட்கள் ஆய்வு செய்யும் லேண்டரின் திட்டம் வெறும் 10 நாட்களாக குறைந்து விடும்.