Chandrayaan 3: நிலவுக்கு சென்று தரையிறங்கும் முன், நாமக்கல் மண்ணில் ஒத்திகை பார்த்த சந்திரயான் - 3..
நாமக்கல் மண்ணில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி நிலவில் எந்த மாதிரியான ரிசல்ட் வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒத்திகை பார்த்துள்ளனர்.
சந்திராயன் - 3விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முன்னதாக, நிலவில் இருப்பதை போன்று இருக்கும் நாமக்கல் மண்ணில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி இஸ்ரோ பரிசோதித்துள்ளது.
இந்தியா மட்டும் இல்லாமல் உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தருணம்தான் சந்திராயன் - 3 விண்கலம் நிலவில் தரையிறங்குவது. உலக நாடுகளே வியக்கும் அளவுக்கு விண்ணில் நடக்கும் அதிசயத்தை பார்க்க ஒவ்வொரு இந்தியரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இன்று மாலை 6.04 மணியளவில் உலகின் எந்த நாடுமே அடையாத, பல்வேறு அதிசயங்களையும், மர்மங்களையும் கொண்ட, நிலவின் தென் துருவ பகுதியை இந்தியாவின் சந்திராயன் - 3 தொட உள்ளது.
பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியாவின் பெருமையை கூறும் இந்த நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சந்திராயன் -3 நிலவில் தரையிறங்குவதற்கு முன்னதாக தமிழகத்தின் அதுவும் நாமக்கல் மண்ணில் தரையிறங்கி ஒத்திகை பார்த்த சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை தரலாம். இந்தியாவில் குறிப்பாக ஏன் நாமக்கல்லில் இருக்கும் மண்ணில் சந்திராயன் -3 தரையிறங்கி ஒத்திகை பார்க்க வேண்டும் என்ற கேள்விக்கு வரலாற்று ஆய்வுகள் பதில்களை கூறுகின்றன. அதில், நாமக்கல்லில் இருக்கும் பாறை மண் நிலவின் மண்ணைப்போல் இருப்பதால், நாமக்கல் மண்ணில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி நிலவில் எந்த மாதிரியான ரிசல்ட் வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒத்திகை பார்த்துள்ளனர்.
சந்திராயன் -3 சோதனை திட்டம் தொடங்கியதும் விக்ரம் லேண்டரும், ரோவரும் நிலவில் தரையிறங்குவதை ஆய்வு செய்து பரிசோதிக்க, அதேபோன்ற மாதிரி மண் இஸ்ரோவுக்கு தேவைப்பட்டது. இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளின் தேர்வாக நாமக்கல்தான் இருந்தது. ஏனெனில் 1950வது ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் நிலவின் மாதிரி மண் நாமக்கலில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கும் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதிகளில் அனார்தசைட் வகையை சேர்ந்த பாறைகள் இருப்பது தெரிய வந்தது.
இந்த பாறைகள் மீது விஞ்ஞானிகளின் பார்வை பட காரணம், நிலவும், பூமியும் உருவானபோது, அனார்தசைட் பாறைகளும் உருவாகி இருக்கின்றன. இதனால், நிலவின் ஒத்த கனிமங்கள் அனார்தசைட் பாறைகளில் இருக்கும் என்பதே விஞ்ஞானிகளின் கணிப்பாக இருந்தது. இதற்கு மற்றொரு சான்றாக 1970ம் ஆண்டு அப்போலோ விண்கலம் செலுத்தப்பட்டபோது நிலவில் அனார்தசைட் மற்றும் பேசால்ட் மண் வகையை சேர்ந்த பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக சந்திராயன் - 2 விண்கலத்தை நிலவில் செலுத்துவதற்கு முன்னதாக, மாதிரி பரிசோதனைக்காக அமெரிக்காவில் இருந்து அனார்தசைட் மண் மாதிரியை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டி இருந்தது.
இதனால் நிலவின் ஆய்வுகளுக்கான மாதிரி மண்ணை இந்தியாவுக்குள்ளேயே தேர்வு செய்யலாம் என இஸ்ரோவின் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இதனால், மும்பை ஐஐடியில் புவி தகவல் கோளியல் மைய ஆராய்ச்சியில் பணியாற்றி வந்த அன்பழகன் என்பவரின் உதவியுடன் நிலவை ஒத்த மண்ணின் ஆய்வு இந்தியாவில் நடத்தியது. 2004-ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தில் இருக்கும் மண், நிலவில் இருக்கும் மன்ணை போல் 99 சதவீதம் ஒத்துப்போவது தெரிய வந்தது. அதையடுத்து, 2012ம் ஆண்டு சித்தம்பூண்டியில் இருந்து எடுக்கப்பட்ட அனார்தசைட் நிறைந்த பாறைகள் 50 டன் மண்ணாக மாற்றி இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இப்படி நாமக்கலில் இருந்து எடுத்து செல்லப்பட்ட மண்ணை நிலவின் மாதிரி மண்ணாக வைத்து தரையை அமைத்து சந்திராயன் - 3 பரிசோதனை நடத்தப்பட்டது. நாமக்கல் மண்ணில் இறக்கபட்ட லேண்டர் மற்றும் ரோவர் வெற்றி அடைந்ததை தொடர்ந்து வரலாற்று அதிசயமாக இன்று, நிலவில் சந்திராயன் - 3 விண்கலம் தரையிரங்குகிறது.