Chandra Babu Naidu: “52 நாட்கள் சிறைவாசம்” - இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார் சந்திரபாபு நாயுடு.. தொண்டர்கள் உற்சாகம்
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிமன்ற காவலில் இருந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட நீதிமன்ற காவலில் இருந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தது. முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்து வந்தார். அப்போது இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் ரூ.118 கோடி ஊழல் நடந்ததாகவும், அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் அரசு குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக 2021 ஆம் ஆண்டு சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். அவரை விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து அம்மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.
When I was in trouble, you all came on the roads and prayed for me. I will never forget the affection shown to me, not only in Andhra Pradesh but also in Telangana and across the world: Former Andhra Pradesh CM and TDP Chief N Chandrababu Naidu https://t.co/CzdP9wSpCh pic.twitter.com/kQIS1qMOmM
— ANI (@ANI) October 31, 2023
இதனிடையே ஜாமீன் கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. தொடர்ந்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மருத்துவ காரணங்களாக சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ராஜமுந்திரி சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு வெளியே வந்துள்ளார்.
அவருக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வெளியே வந்து அனைவர் மத்தியிலும் பேசிய சந்திரபாபு நாயுடு, “நான் கஷ்டத்தில் இருந்தபோது, நீங்கள் அனைவரும் சாலைகளில் வந்து எனக்காக பிரார்த்தனை செய்தீர்கள். ஆந்திரா மட்டுமின்றி, தெலுங்கானாவிலும், உலகம் முழுவதும் என் மீது மக்கள் காட்டிய பாசத்தை என்னால் மறக்க முடியாது” என கூறினார். கிட்டதட்ட 52 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் எதிர் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என அம்மாநில மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.