Census of India: வெயிட்டிங் ஓவர் - அடுத்த ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2028-க்குள் தொகுதி மறுவரையறை?
Census of India: இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Census of India: மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து, 2028ம் ஆண்டுக்குள் தொகுதி மறுவரையறை நிகழ்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு:
இந்தியாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தபப்ட வேண்டும். அதன்படி கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2021ம் ஆண்டு நடத்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கொரோனா போன்ற பல்வேறு காரணங்களால் அந்த பணிகள் நடைபெறாமல் தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை 2025ல் தொடங்கி, ஓராண்டில் முடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, மக்களவைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயப் பணி தொடங்கப்பட்டு அது 2028-க்குள் முடிவடையும் எனவும் கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் நடத்தப்படுகிறது.
கூடுதல் தரவுகளுடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு:
இந்தியாவின் அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சில கூடுதல் தரவுகள் சேகரிக்கப்படலாம். அதன்படி, அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொது மற்றும் SC-ST பிரிவுகளுக்குள் உள்ள உட்பிரிவுகளின் மக்கள் தொகை பற்றிய விரிவான கணக்கு மேற்கொள்ளப்படும். பொதுவாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளானது, மதம், சமூக வர்க்கம், பொது, பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை போன்ற வகைகளின் அடிப்படையில் சேகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30, 2020 வரை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக தேசிய மக்கள்தொகை பதிவேடு (NPR) புதுப்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நோய் நாடு தழுவிய லாக்டவுன்களுக்கும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கும் வழிவகுத்தது. இறப்புகள், அவற்றில் பல பதிவு செய்யப்படவில்லை. அதைதொடர்ந்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து தாமதமாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளையும் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. உள்நோக்கத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்வதோடு, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு பாதகமா?
குடும்ப கட்டுப்பாட்டை சிறப்பாக அமல்படுத்திய மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இதன் காரணமாக தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் போன்ற மாநிலங்களில், தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்ற அச்சமும் நிலவுகிறது. அப்படி நடந்தால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும். அதனால், மாநிலத்திற்கான முக்கியத்துவமும் குறைய வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொகுதிகள் மறுவரையறையின்போது மகளிருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.