CBSE Exam Controversy | எதிர்ப்பலையால் பணிந்த சிபிஎஸ்இ; சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி நீக்கம்
இந்த சூழலிலும் சம்பந்தப்பட்டோரின் கருத்துகளின் அடிப்படையிலும், பாட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்க அனுப்பப்பட்டது. அவர்களின் பரிந்துரைப்படி, சம்பந்தப்பட்ட கேள்வி திரும்பப் பெறப்படுகிறது.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முதல் பருவப் பொதுத் தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேட்கப்பட்டிருந்த ஆங்கிலக் கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கப்படும் என்றும் அதற்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு முதல் பருவப் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஆங்கிலத் தேர்வு வினாத்தாளில் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிப்பது தொடர்பாகக் கேட்கப்பட்டிருந்த கேள்வி சர்ச்சையை எழுப்பியது.
இதுகுறித்துக் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிபிஎஸ்இ-க்கு நேற்று எழுதிய கடிதத்தில், 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு நடைபெற்ற ஆங்கிலத் தேர்வில் இடம்பெற்றிருந்த கேள்விகளை வாசித்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். 'இல்வாழ்கையில் மனைவிமார்கள் வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது', 'குழந்தைகளும், வேலைக்காரர்களும் இந்த வகையில்தான் கீழ்ப்படிய நிர்பந்திக்கப்பட்டனர்' போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கணவனுக்குத் கீழ்ப்பணிந்து நடந்தால்தான், இல்வாழ்கையில் அதிகார கட்டமைப்பு ஒன்று இருக்கும் என்ற கருத்தையும் முன்வைக்கிறது. இத்தகைய வாதங்கள் பாலின பாகுபாட்டினை ஊக்குவிப்பதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னிறுத்திய பாலின வாதங்களுக்கு எதிரானதாகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான பொறுப்பற்ற வெறுப்பை இத்தகைய கேள்விகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (டிச.13) மக்களவையில் சிபிஎஸ்இ கேள்வி குறித்துக் காட்டமாகக் கேள்வி எழுப்பி இருந்தார். மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சிபிஎஸ்இ-ன் கேள்விக்குக் காட்டமான எதிர்வினையை ஆற்றியிருந்தனர்.
இந்நிலையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேட்கப்பட்டிருந்த ஆங்கிலக் கேள்வி, வினாத்தாளில் இருந்து நீக்கப்படும் என்றும் அதற்கான முழு மதிப்பெண் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு இயக்குநர் சன்யம் பரத்வாஜ் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’கடந்த 11-ம் தேதி நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் கேட்கப்பட்ட ஜேஎஸ்கே /1 கேள்வி, சிபிஎஸ்இ விதிமுறைகளுக்கு மாறாக உள்ளது. இந்த சூழலிலும் சம்பந்தப்பட்டோரின் கருத்துகளின் அடிப்படையிலும், பாட வல்லுநர்களிடம் கருத்துக் கேட்க அனுப்பப்பட்டது.
அவர்களின் பரிந்துரைப்படி, சம்பந்தப்பட்ட கேள்வி திரும்பப் பெறப்படுகிறது. இதுதொடர்பாக அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும்’’ என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்