Mahua Moitra Raid: மஹுவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு.. லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதகளம்!
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், முன்னாள் எம்பி மஹுவா மொய்த்ரா வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Mahua Moitra Raid: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் செயல்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்ட சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரும் நடவடிக்கை:
கடந்த ஜனவரி மாதம், ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்த வந்த ஹேமந்த் சோரனை கைது செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முற்பட்டனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், தனது முதலமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து, சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சோரனை தொடர்ந்து, நேற்று முன்தினம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத்தில் கேள்விகளை கேட்க லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில் பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து ஆறு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய லோக்பால் அமைப்பு இந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவருக்கு எதிராக சிபிஐ நேற்று முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தது.
மஹுவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு:
இப்படிப்பட்ட சூழலில், மொய்த்ரா வீட்டில் ரெய்டு நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்விகளை கேட்டு நாடு முழுவதும் கவனம் ஈர்த்த மஹுவா மொய்த்ரா, அந்த கேள்விகளை எழுப்ப லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தன்னிடம் பணம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மொய்த்ராவுக்கு எதிராக மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.
இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார்.
இரு தரப்பையும் அழைத்து, மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. இதை தொடர்ந்து, மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது.
இதையும் படிக்க: Bengaluru Cafe Blast: பெங்களூரு குண்டுவெடிப்பு! சென்னையில் இருக்கிறார்களா குற்றவாளிகள்? வழக்கில் பரபர திருப்பம்!