'பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்': இளம் பெண்களுக்கு பாடம் எடுத்த உயர்நீதிமன்றம்.. அதிர்ந்த மக்கள்..
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை விடுதலை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
சமீப காலமாக, நீதிமன்றங்கள் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறது. அந்த வகையில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தெரிவித்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இளம் பெண்கள், பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
இளம் பெண்களுக்கு பாடம் எடுத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம்:
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை விடுதலை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞரை காதலித்து வந்துள்ளார். இருவரும் முழு சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டுள்ளனர்.
இருப்பினும், குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இப்படிப்பட்ட சூழலில், இளம் வயதினர் மத்தியில் முழு சம்மதத்துடன் நடக்கும் பாலியல் உறவை பாலியல் துன்புறுத்தலுடன் குழப்பப்படுவதாக நீதிமன்றம் கவலை தெரிவித்தது.
"பாலியல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும்"
இந்த வழக்கை விசாரித்த சித்த ரஞ்சன் தாஷ் மற்றும் பார்த்த சாரதி சென் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, "சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் கண்ணியத்தையும் அவர்களின் உடல் சுதந்திரத்தையும் பதின் பருவ ஆண்கள் மதிக்க வேண்டும். இளம் வயதிலேயே பாலியல் உறவுகளால் எழும் சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, இளம் பருவத்தினருக்கு விரிவான உரிமைகள் அடிப்படையிலான பாலியல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும்" என தெரிவித்தது.
பாலியல் இச்சை மற்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதற்கான முக்கியத்தை பற்றி பேசிய நீதிபதிகள், "முதன்மையான பாலின ஹார்மோனாக டெஸ்டோஸ்டிரோன் உள்ளது. ஆண்களின் விந்தணுக்களிலும் பெண்களின் கருப்பைகளிலும் இது முதன்மையாக வெளிப்படுகிறது. அதுமட்டும் இன்றி ஆண், பெண்களின் அட்ரீனல் சுரப்பிகளிலும் சிறிய அளவில் சுரக்கிறது.
ஹைபோதாலமஸ் மற்றும் பிட்யூட்டரி சுரப்பி டெஸ்டோஸ்டிரோனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஆண்களின் பாலியல் ஆசை மற்றும் இச்சைக்கு இது முதன்மையான காரணமாகும். பாலியல் தூண்டுதலால் அந்தந்த சுரப்பி செயல்படும் போது, பாலுணர்வு தூண்டப்படுகிறது.
இளம் பருவத்தினர் மத்தியில் பாலியல் உணர்வு ஏற்படுவது இயல்பானது. ஆனால், பாலியல் தூண்டுதல் அல்லது அத்தகைய தூண்டுதல் தனிப்பட்ட நபரின் சில செயல்களைச் சார்ந்தது.
பாலியல் தூண்டுதல் சாதாரணமானது அல்ல. இயல்பானது அல்ல. சில செயல்களை நிறுத்தினால், பாலியல் தூண்டுதல் இயல்பானதாக இருக்காது" என தெரிவித்தனர்.
இளம் பெண்களுக்கு நீதிபதிகள் வழங்கிய அறிவுறுத்தல்கள்:
1) உடல் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்.
2) உடல் கண்ணியத்தையும் சுய மதிப்பையும் பாதுகாக்க வேண்டும்.
3) பாலினத் தடைகளைத் தாண்டி அவரது ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக செழித்து வளர வேண்டும்.
4) இரண்டு நிமிட பாலியல் இன்பத்திற்காக பாலியல் உணர்வுகளை விட்டுக்கொடுக்கும்போது பெண் தோல்வியாளராக ஆகிறார். எனவே, பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.