(Source: ECI/ABP News/ABP Majha)
அடுத்த ஆகஸ்டுக்குள் 5ஜி… பிஎஸ்என்எல் திட்டம்… 4ஜி-யே வராத நிலையில் சாத்தியமா? அமைச்சர் பதில்!
அடுத்த ஆறு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட நகரங்கள் 5ஜி சேவையைப் பெறும் என்று கூறிய அவர், அதற்கு அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 80-90% பகுதிகளில் 5ஜி சேவையை வழங்க முயற்சிகப்படும் எனக்கூறினார்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது 5ஜி சேவையை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தும் என்று இந்த வாரம் இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 நிகழ்வில் தொலைத்தொடர்பு அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.
அடுத்த ஆகஸ்டில் 5ஜி
ஏற்கனவே "பிஎஸ்என்எல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 5ஜி சேவைகளை வழங்கும்" என்று அவர் பல அறிக்கைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2022 நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அறிமுகம் செய்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் வைஷ்ணவ் 5G அரங்கில் இந்தியாவில் மூன்று தனியார் மற்றும் ஒரு பொது தொலைத்தொடர்பு நிறுவனம் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார், மேலும் 5G திட்டங்கள் சந்தாதாரர்களுக்கு மலிவு விலையில் இருக்கும் என்றும் கூறினார். தற்போது இந்தியாவில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அடுத்த ஆறு மாதங்களில் 200க்கும் மேற்பட்ட நகரங்கள் 5ஜி சேவையைப் பெறும் என்றுந் கூறிய அவர், அதற்கு அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 80-90% பகுதிகளில் 5ஜி சேவையை வழங்க முயற்சிக்கப்படும் எனக்கூறினார்.
4ஜி-இல் இருந்து 5ஜி
BSNL இன்னும் சந்தையில் 4G சேவையையே அமல்படுத்தவில்லை, அதற்குள் அடுத்த ஆண்டுக்குள் 5Gக்கு எப்படி செல்ல முடியும் என்று அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "4G இலிருந்து 5G க்கு மாறுவதற்கு நீண்ட காலம் எடுக்காது. மேலும் BSNL 5G சேவையானது தனித்தன்மையற்ற கட்டமைப்பு மூலம் வழங்கப்படும்.
6 மாதங்களில் 200 நகரங்கள்
இது புதிய அமைப்புகளில் அதிக முதலீடு செய்யாமல் தற்போதுள்ள நெட்வொர்க் உள்கட்டமைப்பைப் பயன்படுத்த 5G சேவைகளை வழங்க டெலிகாம் நிறுவனத்தை அனுமதிக்கிறது. அடுத்த 6 மாதங்களில் 200 நகரங்களுக்கு 5G சேவைகளை கொண்டு வரவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் 90 சதவிகிதம் வரை 5G சேவையை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
பிஎஸ்என்எல் மீளுமா?
BSNL அதன் 2G மற்றும் 3G சேவையுடன் மட்டுமே தற்போது நாட்டில் செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சர்விஸ்களையும் வழங்குகிறது. ஆனால் 4G மற்றும் 5G அரங்கில் நுழைவது, தொலைத்தொடர்பு நிறுவனமானது டெலிகாம் தொழில்துறையில் அதன் நிலையை மீண்டும் பெற உதவும் என்று கூறப்படுகிறது. அது ஒரு சிறிய அளவு மட்டுமே என்றாலும் கூட பிஎஸ்என்எல்-இன் சிறிய மீட்புக்காவது அது உதவும் என்று கூறப்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் திட்டம் என்ன?
ஏர்டெல் தனது 5ஜி சேவையை சில நாட்களுக்கு முன் இந்தியாவின் சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியது, மேலும் 2024 ஆம் ஆண்டுக்குள் அதன் 5ஜி நெட்வொர்க் மூலம் இந்தியா முழுவதையும் உள்ளடக்கும் என்று தொலைத்தொடர்பு நிறுவனம் கூறியுள்ளது. டிசம்பருக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளை 5ஜி சேவையுடன் இணைக்க ஜியோ திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் வோடபோன் ஐடியாவும் அதன் 5G வெளியீட்டுத் திட்டங்களை உருவாக்கி வருகிறது. ஆனால் நுகர்வோருக்கு அது கிடைப்பதற்கான திட்டவட்டமான காலக்கெடுவை இன்னும் வழங்கவில்லை.