சபாஷ்! அனைத்து அலுவலகங்கள், பொது இடங்களிலும் தாய்ப்பால் அளிக்க தனி அறை.. எடுத்துக்காட்டான ஒடிசா
தாய்மார்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் அனைத்து அலுவலகங்களிலும் தாய்ப்பாலூட்டும் அறைகளை அமைக்க வேண்டும் என ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.
![சபாஷ்! அனைத்து அலுவலகங்கள், பொது இடங்களிலும் தாய்ப்பால் அளிக்க தனி அறை.. எடுத்துக்காட்டான ஒடிசா Breastfeeding Cabins to be setup In Offices, Public Places Odisha government announces சபாஷ்! அனைத்து அலுவலகங்கள், பொது இடங்களிலும் தாய்ப்பால் அளிக்க தனி அறை.. எடுத்துக்காட்டான ஒடிசா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/30/95d24bb5b19708749540f6c32228f8711725022897794729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொது இடங்களில் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதில் தாய்மார்கள் சிரமப்படுவது உண்டு. மறைவான இடத்திற்கு சென்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிக்க வேண்டிய சூழல்தான் நிலவி வருகிறது. இந்த நிலையில், தாய்மார்களின் துயரை போக்க ஒடிசா அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
எடுத்துக்காட்டாக திகழும் ஒடிசா அரசு: அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களிலும் தாய்ப்பால் கொடுக்கும் அறைகளை அமைக்க மூத்த அதிகாரிகளுக்கு ஒடிசா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, அனைத்து துறை செயலாளர்கள், இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை கூடுதல் செயலாளர் ரீனா மொகபத்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
ஒடிசாவில் நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்த அனைத்து அலுவலகங்களிலும் தாய்ப்பாலூட்டும் அறைகளை அமைக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவலகங்களில் பாலூட்டும் அறைகள் அமைப்பதை செயலர்கள் மற்றும் இயக்குநர்கள் கவனிக்க உள்ளனர்.
பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தாய்ப்பால் அளிக்கும் அறைகளை அமைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்வார்கள். 24 ஆண்டுகால, பிஜு ஜனதா தள அரசு கடந்த ஜூன் மாதம் முடிவுக்கு வந்தது. மக்களவை தேர்தலுடன் நடத்தப்பட்ட ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முதல்முறையாக ஆட்சி அமைத்தது.
சபாஷ் சொல்லும் பெண்கள்: இதையடுத்து, பெண்களை மையப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த 16ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி, மாதவிடாயின்போது அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஒருநாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, தாய்ப்பால் அளிக்க தனி அறை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து குடும்ப நல இயக்குனரும் மருத்துவருமான சஞ்சுக்தா சாஹூ கூறுகையில், "தாய்ப்பாலில் பாதுகாப்பு ஆன்டிபாடிகள் இருப்பதால், அது குழந்தைகளுக்கு நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது. ஊட்டச்சத்துக்கான முதல் ஆதாரமாக உள்ளது.
தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் நன்மை பயக்கும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துகிறது" என்றார்.
பெண்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி வழங்க “சுபத்ரா” யோஜனா திட்டத்தையும் ஒடிசா பாஜக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)