Popular front of India: பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 33 வங்கிக் கணக்குகள் முடக்கம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகள் அமலாக்க இயக்குநரகத்தால் முடக்கம் செய்யப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கிக் கணக்குகள் அமலாக்க இயக்குநரகத்தால் முடக்கம் செய்யப்பட்டது. மேலும் அது தொடர்பான அமைப்புகளின் வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு 2006ல் தொடங்கப்பட்டது. இது ஒரு இஸ்லாமிய நெறி சார்ந்து இயங்கும் அமைப்பு ஆகும்.
முன்னதாகக் கடந்த மே மாதத் தொடக்கத்தில்தான் 22 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை மோசடி செய்ததாகக் கூறி, இரண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்களான அப்துல் ரசாக் பீடியக்கல் மற்றும் அஷ்ரப் ஆகியோர் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்போது இந்த நடவடிக்கையை இயக்குநரகம் மேற்கொண்டு உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும், மற்ற பிஎஃப்ஐ தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள். கேரளாவின் மூணாறு மாவட்டத்தில் மூனார் வில்லா விஸ்டா ப்ராஜெக்ட் என்ற குடியிருப்புத் திட்டத்தை உருவாக்கி வருகின்றனர். அமைப்புக்கான நிதியைத் திரட்டுவதற்காகவும் அமைப்பின் செயல்பாடுகளுக்காகவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது.
"கணக்கிடப்படாத மற்றும் விவரிக்கப்படாத பணமும் அந்நிய முதலீடும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது” என்று அமலாக்கத்துறை கூறியிருந்தது.
மலப்புரத்தில் உள்ள PFI இன் பெரும்படப்பு பிரிவின் பிரிவுத் தலைவரான ரசாக், இந்த ஆண்டு மார்ச் மாதம் கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேற முயன்றதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்டார் அஷ்ரப். கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி கேரளாவில் அந்த அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான சோதனையின் போது சில ஆவணங்களைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அபுதாபியில் உள்ள ஒரு பார்-கம்-ரெஸ்டாரண்ட் உட்பட சில வெளிநாட்டு சொத்துக்களை PFI தலைவர்கள் கையகப்படுத்தியதாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், PFI இன் நீண்டகால உறுப்பினரான ரசாக், வளைகுடா நாடுகளில் உள்ள அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில் முக்கிய நபராகவும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இந்த அமைப்பிற்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சுமார் இந்திய ரூபாய் 34 லட்சத்தை பாப்புலர் ப்ரண்ட்டின் முன்னணி அமைப்பான Rehab India Foundation (RIF) க்கு மாற்றினார். இதேபோல், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) - பிஎஃப்ஐயின் அரசியல் முன்னணி- அதன் தலைவர் எம் கே ஃபைசிக்கு அவர் இந்திய ரூபாய் 2 லட்சத்தை மாற்றினார். விசாரணையில் அவர் வெளிநாடுகளில் நிதி திரட்டுவதும் வசூலிப்பதும், சட்டவிரோதமான வழிகள் மூலம் அவற்றில் சுமார் ₹19 கோடியை இந்தியாவுக்கு மாற்றியதும் தெரியவந்தது” என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.