BJP MLA Banshidhar : ’சரஸ்வதியை இம்ப்ரெஸ் பண்ணுங்க....’ - மாணவர்களிடம் பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..
சர்வதேச பெண் குழந்தை தினம் குறித்த நிகழ்வில் பெண் கடவுள்களை கவர்ந்திழுக்குமாறு மாணவர்கள் மத்தியில் இவர் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையைக் கிளப்பி கண்டனங்களைப் பெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநில அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்எல்ஏவுமான பன்ஷிதர் பகத், பெண் கடவுள்களைக் கவர்ந்திழுக்குமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானி பகுதியில், நேற்று முன் தினம் (அக்.10) சர்வதேச பெண் குழந்தை தினத்தை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றில், அம்மாநில அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான பன்ஷிதர் பகத் கலந்துகொண்டு பேசினார்.
அதில் அவர் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களை வணங்குவது குறித்து பகிர்ந்து கொண்ட கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இந்த விழாவில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்ட நிலையில், கல்வி கற்க கடவுள் சரஸ்வதியை கவர்ந்திழுக்குமாறு மாணவர்களுக்கு பன்ஷிதர் அறிவுரை வழங்கியுள்ளார்.
'கடவுளும் உங்களுக்கு உதவி செய்துள்ளார். நீங்கள் புத்திசாலித்தனத்தைப் பெற விரும்பினால், சரஸ்வதியை கவர்ந்திழுங்கள்.
உங்களுக்கு சக்தி வேண்டுமானால் துர்க்கையை நீங்கள் மகிழ்விக்கலாம்; உங்களுக்கு பணம் வேண்டுமானால் லட்சுமியை கவர்ந்திழுங்கள். ஆண்களிடம் என்ன இருக்கிறது” எனப் பேசினார். “இமயமலைக்கு சென்று குளிரில் படுத்திருக்கும் சிவபெருமான் இருக்கிறார். அவர் மேலே தலையில் அமர்ந்து பாம்பு மேலிருந்து தண்ணீர் பாய்கிறது.
அதே சமயம் விஷ்ணு கடலின் ஆழத்தில் மறைந்திருக்கிறார். இந்த ஆதரவற்ற மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசக்கூட முடியாத நிலையில் உள்ளனர். பெண்களின் அதிகாரம் நீண்ட காலமாக நிலவி வருகிறது" எனப் பேசியுள்ளார்.
Correction | For knowledge, 'pataao' Goddess Saraswati. For power, 'pataao' Goddess Durga & for wealth, 'pataao' Goddess Lakshmi. What does a man have? Lord Shiva lives in mountains, Lord Vishnu in deep ocean. Women empowerment prevails since long: Banshidhar Bhagat, BJP (11.10) pic.twitter.com/hd7hsW1PlW
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) October 12, 2022
இந்நிலையில் சர்வதேச பெண் குழந்தை தினம் குறித்த நிகழ்வில் பெண் கடவுள்களை கவர்ந்திழுக்குமாறு மாணவர்கள் மத்தியில் இவர் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, கண்டனங்களைப் பெற்று வருகிறது.
உத்தராகாண்ட் மாநில பாஜக மூத்த அரசியல்வாதியான பன்ஷிதர் பகத், நைனிடால் மாவட்டத்தில் உள்ள கலதுங்கி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ ஆவார்.
இதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டு இவர், 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு உத்தரகாண்ட் பிரதமர் மோடி அலையை நம்பி இருக்கக்கூடாது எனப் பேசியது பரபரப்பைக் கிளப்பியது.
முன்பு போல, ”பிரதமர் மோடியின் பெயரில் வாக்குகளைப் பெறுவது இப்போது நடக்காது. இந்த முறை மோடி அலையில் வந்துவிடலாம் என்று நினைத்துவிடாதீர். சட்டமன்ற உறுப்பினர்களே நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போதுதான், அதிகபட்ச வாக்குகளைப் பெற்று வெற்றிபெற முடியும்” என அவர் பேசியது அச்சமயம் சலசலப்பை ஏற்படுத்தியது.