Bihar Election Result: அன்றே கணித்த அமித் ஷா; பீஹாரை சுருட்டி எடுத்த பஞ்சபாண்டவர் அணி- சுவாரசிய தகவல்!
Bihar Election 2025 Result: என்டிஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வெல்லும். குறைந்தபட்சம் 160 சீட்டுகளை வென்று மெஜாரிட்டி பெறும் - அமித் ஷா.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், என்டிஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வெல்லும். குறைந்தபட்சம் 160 சீட்டுகளை வென்று மெஜாரிட்டி பெறும் என்று அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தது தற்போது வைரலாகி வருகிறது.
பிஹார் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
நவம்பரில் நடந்த தேர்தல்
முன்னதாக பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. பாஜக, ஜேடியூ கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மற்றும் காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி இடையே நேரடிப் போட்டி இருந்தது. இண்டி கூட்டணி மகாகத் பந்தன் (மகா கூட்டணி) என்றும் அழைக்கப்பட்டது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி, ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டன. இதில், மொத்தமாக 66.91 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
11 மணி நிலவரம்
இன்று காலை 11 மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 184 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. வெறும் 54 தொகுதிகளிலேயே முன்னிலையில் உள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாஜகவின் என்டிஏ கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியுள்ளது.
இதற்கிடையே தனியார் செய்தித் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது வைரலாகி வருகிறது. அதில், ’’என்டிஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வெல்லும். குறைந்தபட்சம் 160 சீட்டுகளை வென்று மெஜாரிட்டி பெறும்’’ என்று தெரிவித்து இருந்தார்.
பஞ்ச பாண்டவர்களின் சண்டை
’’மக்கள் எங்களைக் கொண்டாடும் விதத்தைப் பார்க்கும்போது, என்டிஏ கூட்டணியுடன்தான் மக்கள் இருப்பதாக உணர்கிறேன். இந்தப் போட்டியை 5 பஞ்ச பாண்டவர்களின் சண்டை என்றே அழைப்பேன். நாங்கள் (ஜேடியு, பாஜக, எல்ஜேபி, எச்ஏஎம் மற்றும் ஆர்எல்எம்) ஐந்து பேரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை’’ என்றும் அமித் ஷா தெரிவித்து இருந்தார்.





















