பாரத் மாதா கீ ஜெய் கோஷம்.. மாவோயிஸ்ட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் சவப்பெட்டியை ஏந்திச்சென்ற முதலமைச்சர்...!
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 ராணுவ வீரர்களும் ஓட்டுநர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
அழு குரல்கள் மற்றும் பாரத் மாதா கீ ஜெய் கோஷத்திற்கு மத்தியில் மாவோயிஸ்ட் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 10 ராணுவ வீரர்களும் ஓட்டுநர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இரண்டு ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய தாக்குதல்:
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இதுவாகும். இந்த சூழ்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், அவர்களது குழந்தைகள், மற்ற குடும்ப உறுப்பினர்கள் கதறி அழும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுக்கு, பெண் ராணுவ வீரர்கள், ஆறுதல் கூறுகின்றனர்.
சவப்பெட்டியை ஏந்தி சென்ற முதலமைச்சர்:
நக்சல் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடலை அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லும்போது ராணுவ வீரர் ஒருவரின் சவப்பெட்டியை சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் ஏந்தி சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள கர்லி பகுதியில் இன்று, ராணுவ வீரர்களின் உடல்களுக்கு மாலை அணிவிக்கும் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பாகேல், மாநில உள்துறை அமைச்சர் தாம்ரத்வாஜ் சாஹு, எம்.பி.க்கள் தீபக் பைஜ் மற்றும் பூலோதேவி நேதம், மாநில காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் ஜுனேஜா ஆகியோர் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாகேல், "ஜவான்களின் தியாகம் வீண் போகாது. நக்சலைட்டுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும். நக்சலைட்டுகளுக்கு எதிராக முக்கிய பகுதிகளில் நமது வீரர்கள் கடும் சண்டையிட்டு வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில், நக்சலைட்டுகளின் மையப் பகுதிகளில் 75 முகாம்கள் (பாதுகாப்புப் படைகளின்) அமைக்கப்பட்டுள்ளன. முன்பு பாதுகாப்புப் பகுதிகளில் மட்டுமே முகாம்கள் அமைக்கப்பட்டன.
"ஏமாற்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்"
இப்போது, அரன்பூர் மற்றும் பைராம்கரில் இருந்து ஜாகர்குண்டாவுக்குச் செல்ல சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால், சுக்மாவுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஹித்மாவின் (பயங்கர நக்சல் தளபதி) தலைமையகம் என்று அழைக்கப்படும் புவர்த்தி (பிஜப்பூர் மாவட்டத்தில்) இப்போது எல்லா பக்கங்களிலிருந்தும் (பாதுகாப்புப் படை முகாம்களால்) சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மாவோயிஸ்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, ஏமாற்றம் அடைந்ததில் அவர்கள் நடத்திய இதுபோன்ற தாக்குதல் நடந்துள்ளது" என்றார்.