Bharat Jodo Yatra: பாரத் ஜோடோ யாத்திரையில் டிரம்ஸ் வாசித்து அசத்திய ராகுல் காந்தி.. வைரலாகும் வீடியோ.
மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின்போது நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் இசை கலைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி டிரம்ஸ் வாசித்தார்.
மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின்போது நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் இசை கலைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி டிரம்ஸ் வாசித்தது கவனத்தை ஈர்த்துள்ளது
தேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தலைமையிலான 'பாரத் ஜோடோ யாத்திரை'யின்போது, மகாராஷ்டிராவில் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள கலாம்நூரியில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியின் போது இசை கலைஞர்கள் டிரம்ஸ் வாசித்ததை ரசித்த அவர், மேடையில் அவரும் சேர்ந்து டிரம்ஸ் வாசித்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பதிவில் அவர் ஒரு இசை கலைஞரிடமிருந்து டிரம்ஸ் வாசிப்பதற்கான நீண்ட கருவியை வாங்கி அவரும் வாசிப்பது போன்றும் அருகில் இருக்கும் கலைஞர் ஒருவர் எவ்வாறு தாளத்திற்கு ஏற்ப வாசிப்பது என்பதை கற்றுப்கொடுப்பதும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவிற்கு பலரும் ராகுல் காந்தியை மக்கள் தலைவர் என கமெண்ட் செய்துள்ளனர்.
#WATCH | Congress MP Rahul Gandhi tries his hand on drum with artists at a cultural show in Kalamnuri, Hingoli district in Maharashtra during the 'Bharat Jodo Yatra'
— ANI (@ANI) November 13, 2022
(Source: AICC) pic.twitter.com/oIKLnscM1g
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலை எதிர்த்தும் மக்களிடம் உண்மையை எடுத்துச் சொல்லி நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதாகவும் கூறி, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்கத் திட்டமிட்டு, அதன்படி, தற்போது பயணித்து வருகிறார்.
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.. 60 நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் நுழைந்த ராகுல்காந்திக்கும் அவருடன் தொடர்ந்து பயணிக்கும் நூற்றுக்கணக்கான தொண்டர்களுக்கும், மகாராஷ்டிரா காங்கிரஸ் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
காங்கிரஸின் வெகுஜன தொடர்பு முயற்சியான இந்த யாத்திரை, மகாராஷ்டிாவின் 14 நாள் பயணத்தில், 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக பயணிக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 382 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் காங்கிரஸின் ஒற்றுமை யாத்திரை வரும் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது. மேலும் அந்த மாநிலத்தில் கந்த்வா, இந்தூர், உஜ்ஜைன் மற்றும் அகர்-மால்வா வழியாகச் சுமார் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைகிறது.