Modi on Indian Military: தீரமிக்க இந்திய முப்படைகளால் பாகிஸ்தான் மண்டியிட்டது - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
இந்திய முப்படைகளின் தீரத்தால் பாகிஸ்தான் இந்தியாவிடம் மண்டியிட்டதாகவும், சிந்தூரத்தை அழிக்க வந்தவர்கள் மண்ணில் புதைக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். முழு விவரங்களை காணலாம்.

ஆபரேஷன் சிந்தூரின்போது, இந்திய முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும், அவர்களின் தீரத்தாலேயே பாகிஸ்தான் மண்டியிட்டது எனவும் பிதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்து, ஆவேசமாக அவர் பேசிய விவரங்கள் குறித்து பார்ப்போம்.
ராஜஸ்தானில் ரூ.26,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் அர்ப்பணிப்பு
ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து, பிரசித்தி பெற்ற கர்ணி மாதா ஆலயத்திற்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை சிறப்பிக்கும் வகையில், கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மாவும் உடனிருந்தார்.
இதைத் தொடர்ந்து, தேஷ்னோக் பகுதியில், மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையம் ஒன்றை தொடங்கி வைத்த அவர், பிகானீர்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதையடுத்து, அங்கிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பலானா கிராமத்திற்கு சென்ற மோடி, அங்கு பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, 26,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் 103 ரயில் நிலையங்கள் அமிரித் நிலையங்களாக அறிவிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன. 1,100 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கினறன.
தமிழ்நாட்டில், சென்னை பரங்கிமலை, சாமல்பட்டி, திருவண்ணாமலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருதாச்சலம், போளூர், குளித்துறை ஆகிய 9 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த 103 ரயில் நிலையங்களையும், ராஜஸ்தானிலிருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி உரையாற்றினார்.
“தீரமிக்க இந்திய முப்படைகளால் பாகிஸ்தான் மண்டியிட்டது“
இந்நிகழ்வில், அம்ரித் பாரத் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் குறித்தும் பேசினார். பஹல்காமில், மதம் என்ன என்று கேட்கப்பட்டு, நம்முடைய சகோதரிகளின் நெற்றியில் இருந்த சிந்தூர் அழிக்கப்பட்டதாகவும், அந்த வலியை 140 கோடி இந்தியர்களும் உணர்ந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அந்த பயங்கரவாதிகளுக்கு, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு தண்டனை அளிக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அந்த ஆபரேஷன் சிந்தூரை, நம்முடைய தீரமிக்க படைகள் தீர்க்கமுடன் செய்து முடித்ததாகவும் உணர்ச்சி பொங்க கூறினார்.
முப்படைகளுக்கும் இந்தியா முழு சுதந்திரம் அளித்ததால், பாகிஸ்தான் மண்டியிட்டதாகவும் மோடி குறிப்பிட்டார். சிந்தூரம் அழிக்க புறப்பட்டவர்கள், மண்ணில் புதைக்கப்பட்டனர் என்றும், இந்தியாவின் ரத்தம் மண்ணில் சிந்த வைத்தவர்களின் கணக்குகள் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் ஆவேசமாக கூறினார் பிரதமர் மோடி.
மேலும், இந்தியா அமைதியாக இருக்கும் என நினைத்தவர்கள், இன்று வீடுகளுக்குள் முடங்கிவிட்டதாகவும், ஆயுதங்களை நினைத்து பெருமைப் பட்டவர்கள், அதன் இடிபாடுகளில் புதைக்கப்பட்டு விட்டனர் எனவும் பிரதமர் மோடி பேசினார்.
இந்த ஆபரேஷன் சிந்தூர், நமது கோபத்தின் அடையாளம் மட்டுமல்ல, புதிய இந்தியாவின் அடையாளமும் தான் எனவும், இது நீதியின் புதிய கோட்பாடாக திகழ்வதாகவும் மோடி கூறினார். மேலும், இந்த பதிலடியின் மூலம், இந்தியாவின் வலிமையை உலகமே பார்த்ததாகவும் பெருமிதம் தெரிவித்தார் மோடி.





















