பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு...சக ராணுவ வீரர்களை கொன்றது ஏன்? கைதான பாதுகாப்பு படை வீரர் பரபரப்பு வாக்குமூலம்..
சக ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக ராணுவ வீரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். தூங்கி கொண்டிருந்த நான்கு ராணுவ வீரர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழ்நிலையில், சக ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்ததை ஒப்பு கொண்ட ராணுவ வீரர்:
கொலை செய்ததை ஒப்பு கொண்ட ராணுவ வீரர் மோகன் தேசாய், தனிப்பட்ட தகராறு காரணமாக சக ராணுவ வீரர்களை சுட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். துப்பாக்கிச் சூடு தொடர்பாக 4 வீரர்களிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சாட்சியான மேஜர் அசுதோஷ் சுக்லாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அடையாளம் தெரியாத இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கொல்லப்பட்ட நான்கு ராணுவ வீரர்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
அவர்கள், சாகர், கமலேஷ், சந்தோஷ் மற்றும் யோகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ராணுவத்தின் பீரங்கிப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஏப்ரல் 12ஆம் தேதி நடந்த பரபரப்பு துப்பாக்கிச்சூடு சம்பவம் மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தொடரும் பதற்றம்:
குறிப்பாக, காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால் சிங்கை கைது செய்வதற்காக மாநில காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், இந்த துப்பாக்கிச்சூடு நடந்து பல்வேறு வதந்திகளுக்கு வழிவகுத்தது. ஆனால், துப்பாக்கிச்சூடு தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கை அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றிப்புள்ளி வைத்துள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்கும் அம்ரித் பால் சிங்குக்கும் தொடர்பில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆரம்பத்தில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் INSAS அசால்ட் ரைபிள், 28 ரவுண்டு குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது. ஏன் என்றால், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டு நாள்கள் முன்புதான் ரைபிளும் குண்டுகளும் காணாமல் போனது.
பின்னர், இந்த ஆயுதங்களை ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னணியில் சில ராணுவ வீரர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, இது தொடர்பாக விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
அதிகாலை 4:30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் குர்தா-பைஜாமாவில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த சிலர் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவரிடம் INSAS அசால்ட் ரைபிள் இருந்தது. மற்றொருவர் கோடரியை ஏந்தியிருந்தார். துப்பாக்கிச்சூடு நடந்ததை தொடர்ந்து, அவர்கள் ராணுவ நிலையத்திற்கு அருகில் உள்ள காட்டை நோக்கி ஓடிவிட்டனர்.