பக்தி பரவசமாக்கும் அயோத்தி கோயில் கருவறை! ராம ஜென்மபூமி அறக்கட்டளை வெளியிட்ட புதிய புகைப்படம்!
அயோத்தி ராமர் கோயிலின் கருவறை புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் கருவறை:
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் கருவறை புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவருமான சம்பத் ராய், எக்ஸ் வலைதள பக்கத்தில், புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை வெளியிட்ட சம்பத் ராய், "பகவான் ஸ்ரீ ராம்லாலாவின் சன்னதி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. சமீபத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது. சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
प्रभु श्री रामलला का गर्भ गृह स्थान लगभग तैयार है। हाल ही में लाइटिंग-फिटिंग का कार्य भी पूर्ण कर लिया गया है। आपके साथ कुछ छायाचित्र साझा कर रहा हूँ। pic.twitter.com/yX56Z2uCyx
— Champat Rai (@ChampatRaiVHP) December 9, 2023
கோயிலுக்கு உள்ளே வைக்கப்பட உள்ள ராமர் சிலை குறித்து சமீபத்தில் பேசியிருந்த சம்பத் ராய், "ராமர் கோயிலில், மூன்று இடங்களில் ராமரின் ஐந்து வயது குழந்தை வடிவத்தை சித்தரிக்கும் 4'3" சிலை கட்டப்பட்டு வருகிறது. மூன்று கைவினை கலைஞர்கள் மூன்று வெவ்வேறு கற்களில் சிலையை செதுக்கி வருகிறார்கள். அவற்றில் ஒன்று இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும். இந்த சிலைகள் 90 சதவீதம் தயார் நிலையில் உள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முடிய ஒரு வாரம் ஆகும்" என்றார்.
வியப்பில் ஆழ்த்தும் ராமர் கோயில் உள்கட்டமைப்பு:
சமீபத்தில், கோயிலின் பல்வேறு புகைப்படங்களை அறக்கட்டளை வெளியிட்டிருந்தது. அதில், கோயிலின் உள்புறத்தில் இருக்கும் தூண்கள் காட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தான் பரத்பூர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களை கொண்டு கோயிலின் தூண்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமர் கோயிலின் வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் ராமர் கோயிலின் உள்புறம் எப்படி இருக்கும் என்பது காண்பிக்கப்பட்டுள்ளது. சூரிய அஸ்தமனத்துடன் வீடியோ காட்சி தொடங்குகிறது.
அடுத்த காட்சியில், கட்டிடக்கலைஞர் ஒருவர், கோயில் தூணில் சிற்பம் செதுக்குவது பதிவாகியுள்ளது. கோயிலின் கருவறை, தங்கக் கதவுகள், தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், கோவிலின் சுவர்கள் ஆகியவை வீடியோவில் காட்டப்பட்டது.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களை அழைக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் 25,000 துறவிகளை தவிர, கூடுதலாக 10,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.