"5 லட்சத்திற்கும் மேலான வாக்குகளை எண்ணவில்லை" மக்களவை தேர்தல் முடிவுகளில் தொடர் மர்மம்!
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் முரண்பாடு இருப்பதாக Association of democratic reforms குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆக போகிறது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அது தொடர்பாக தொடர் சர்ச்சை எழுந்து வருகிறது. வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பான தரவுகளில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் முரண்பாடுகள் இருப்பதாகவும் தொடர் புகார் எழுந்த வண்ணம் உள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுகளில் தொடர் மர்மம்: இந்த நிலையில், அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீபார்ம் (ADR) என்ற அரசு சாரா லாபம் நோக்கமற்ற அமைப்பு, பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் முரண்பாடு இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
362 மக்களவை தொகுதிகளில் 5 லட்சத்து 54 ஆயிரத்து 598 வாக்குகள் குறைவாக எண்ணப்பட்டிருப்பதாகவும் 176 தொகுதிகளில் பதிவான வாக்குகளை விட 35,093 வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இறுதி வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தொடர் தாமதம் ஏற்பட்டதாகவும் தொகுதியான வாரியான, வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரங்களை இன்னும் வெளியிடவில்லை என்றும் அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீபார்ம் அமைப்பு புகார் கூறியுள்ளது.
பகீர் கிளப்பும் ADR: நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் ஜெகதீப் சோக்கர், "முரண்பாடுகள் நிறைந்த தரவுகளின் அடிப்படையில்தான் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதா? சரியான தேர்தல் முடிவுகள்தான் வெளியிடப்பட்டு இருக்கிறதா? என்ற கவலையையும் குழப்பத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது?" என்றார்.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் பதில் அளிக்கவில்லை. அம்ரேலி, அட்டிங்கல், லட்சத்தீவு, தாதர் மற்றும் நாகர் ஹவேலி ஆகிய தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்டு வாக்குகளுக்கும் இடையே குறிப்பிடத்தகுந்த முரண்பாடு இருப்பதாக அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீபார்ம் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை குறித்த இறுதியான, நம்பகத்தன்மையான தரவுகளை வெளியிடுவதற்கு முன்பு தேர்தல் முடிவுகளை அறிவித்ததற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் இதுவரை அளிக்கவில்லை என்றும் புகார் கூறியுள்ளது.