ராஜஸ்தான் அரசியலில் தொடர் பரபரப்பு... கவிழ்கிறதா காங்கிரஸ் அரசு? அடுத்தகட்ட அப்டேட் இதுதான்!
ராஜஸ்தானில், மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழலுக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி தொடர் இழுபறியை ஏற்படுத்தி வருகிறது.
முன்னதாக, முதலமைச்சராகவும் கட்சியின் தலைவராகவும் இருக்க அவர் விருப்பம் தெரிவித்த நிலையில், ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி அவரின் விருப்பத்திற்கு எதிராக திரும்பியது. குறிப்பாக, ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே தரப்பட வேண்டும் என்பதில் ராகுல் காந்தி தீவிரமாக உள்ளார். இது தொடர்பாக, உதய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதற்கு மத்தியில், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், கெலாட் ஆதரவாளர்கள், அக்கூட்டத்திற்கு செல்லாததால் அது நடைபெறவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே, ராஜஸ்தானில், மூத்த தலைவர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலிலேயே, சச்சின் பைலட்தான் முதலமைச்சராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எம்எல்ஏக்களின் ஆதரவு கெலாட்டுக்கு இருந்ததால், அவரே மீண்டும் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி, துணை முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட் ஏற்று கொண்டார். ஆனால், 2020 ஆம் ஆண்டில், பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்எல்ஏக்கள் சொந்த கட்சிக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதையடுத்து, துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
இருப்பினும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் தலையீட்டால் அப்பிரச்சினை முடித்து வைக்கப்பட்டு, சச்சினும் அவரது ஆதரவாளர்களும் மீண்டும் கட்சிக்கு திரும்பினர். அந்த பிரச்சினை, தற்போது சச்சினுக்கு இடியாக விழுந்துள்ளது. அந்த சமயத்தில், அரசை ஆதரித்த 102 எம்எல்ஏக்களில் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என கெலாட் ஆதரவு 56 எம்எல்ஏக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.
200 சட்டப்பேரவை இடங்கள் கொண்ட ராஜஸ்தானில், காங்கிரசுக்கு 100 எம்எல்ஏக்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸில் சேர்ந்த 6 பேரும் ஆதரவு அளித்து வருகின்றனர். காங்கிரஸுக்கு 101 எம்எல்ஏக்கள், அதாவது சரியாக பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண்ணிக்கையிலேயே ஆதரவு உள்ளது. இதன் காரணமாக, ஆட்சியை நிலையாக வைத்து கொள்ள சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
13 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு ராஜஸ்தானில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 13 பேரில் 12 பேர் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் பதவியை சச்சின் பைலட்டுக்கு அளித்தால் ராஜினாமா செய்து விடுவோம் என கெலாட்டுக்கு ஆதரவாக உள்ள 90 எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.