பரபரப்பான என்கவுண்டரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்கள்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம்
ரஜோரி மாவட்டம் பாஜி மால் காடுகளில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் என்கவுண்டர்:
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்தின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பு வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, பாதுகாப்பு, தகவல் தொடர்பு, வெளி விவகாரங்களை தவிர மற்ற எல்லா துறைகளிலும் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் ஜம்மு காஷ்மீர் அரசுக்கு வழங்கப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக் இருந்து வருகிறது. அது மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ரஜோரி மாவட்டம் பாஜி மால் காடுகளில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த என்கவுண்டரில் ராணுவ அதிகாரி ஒருவரும் பாதுகாப்பு படை வீரர்கள் மூவரும் கொல்லப்பட்டுள்ளனர். காட்டில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல்துறையும் ராணுவமும் இணைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பாதுகாப்பு படைக்கு கிடைத்த ரகசிய தகவல்:
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பீர் பஞ்சால் காடு, பாதுகாப்பு படையினருக்கு கடந்த சில மாதங்களாகவே பெரும் சவாலாக மாறியுள்ளது. அடர்ந்த காடுகளில் தீவிரவாதிகள் மறைந்து வாழ்ந்து வருகின்றனர். நிலப்பரப்பை தங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்கின்றனர். கடந்த வாரம் கூட, ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.
கடந்த மாதம், தெற்கு காஷ்மீர் புல்வாமாவில் வெளிமாநில தொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தும்சி நவ்போரா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பதாக காஷ்மீர் காவல்தறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில், குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே மச்சில் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததை அடுத்து, மாநில காவல்துறையும், ராணுவமும் இணைந்து அங்கு சென்று தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு இதுவரை கொல்லப்பட்டுள்ள 46 பயங்கரவாதிகளில் 37 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் 9 பேர் மட்டுமே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. உள்ளூர் பயங்கரவாதிகளைவிட வெளிநாட்டு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீரில் தற்போது சுமார் 130 பயங்கரவாதிகள் உள்ளதாகவும், இவர்களில் பாதி பேர் வெளிநாட்டவர்ள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.