Maharastra Death: அலட்சியத்தின் உச்சம்! 2 நாள்களில் 29 பேர் உயிரிழப்பு..மகாராஷ்டிராவை பதற வைத்த மருத்துவமனைகள்
மகாராஷ்ராவில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Maharastra Death: மகாராஷ்ராவில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்ராவில் தொடரும் உயிரிழப்புகள்:
மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனைகளில் கொத்து கொத்தாக மரணங்கள் ஏற்படுகின்றன. அதாவது, நேற்று, மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக பிறந்த 12 குழந்தைகள் உள்பட 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருந்துகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த 12 குழந்தைகளில் 6 பெண் குழந்தைகளும் 6 ஆண் குழந்தைகள். அவர்களில் 6 பேர் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும், பிறர் கடந்த 24 மணி நேரத்திலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மற்ற 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் மற்றொரு மருத்துவமனையில் ஒரே நாளில் மேலும் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவுரங்காபாத் மாவட்டத்தில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த 8 பேரில் 2 பச்சிளம் குழந்தைகள் என்று தெரிய வந்துள்ளது. மேலும், 5 ஆண்களும், ஒரு பெண்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.
காரணம் என்ன?
மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைகளில் பொதிய அளவு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருந்துகள் இல்லாததே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சில சமயங்களில் நிறுவனத்தின் வரவு செலவுத் திட்டத்தை விட அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், பல மருத்துவமனை ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையும் இருந்தது என அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹாஃப்கைன் என்ற நிறுவனத்திடமிருந்து மருந்துகளை மருத்துவமனை வாங்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் மருத்துவமனை டீன் கூறியுள்ளார். இதனால், நோயாளிகள் உள்ளூர் கடைகளில் இருந்து மருந்துகளை வாங்கிய பின்னரே, அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது என்று தெரிகிறது.
பிரச்னையை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்:
இந்த சம்பவத்தை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில், "இந்த சம்பவம் மாநில அரசின் சுகாதார துரையில் ஒரு கருப்பு கறை. நேற்று, 24 பேர், இன்று 8 பேர் உயிரிழந்தது கவலை அளிக்கிறது. இது மாநில அரசுக்கு ஒரு கரும்புள்ளியாகிவிட்டது" என்றார். இவரை தொடர்ந்து, "பாஜக அரசு விளம்பரங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாயை செலவழிப்பதாகவும், ஆனால், குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளை வாங்க அதனிடம் பணம் இல்லை கூறுகிறது" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.