![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Manipur: இரண்டாக பிரிக்கப்படுகிறதா மணிப்பூர்? பழங்குடி மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த உத்தரவாதம்
குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழு, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளனர்.
![Manipur: இரண்டாக பிரிக்கப்படுகிறதா மணிப்பூர்? பழங்குடி மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த உத்தரவாதம் Amit shah assures kuki zo team of no police operations without the presence of central forces Manipur: இரண்டாக பிரிக்கப்படுகிறதா மணிப்பூர்? பழங்குடி மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த உத்தரவாதம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/10/4715dff43f8416c80710af39273ddd611691654485673729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தேயி ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது.
மணிப்பூர் பிரச்னை தீர்க்கப்படுமா?
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த வன்முறையில், தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றமே முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், இதுவரை, மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது.
இந்த நிலையில், குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழு, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியுள்ளனர். அரசியல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முன்பு மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும்படி அமித் ஷா, பிரதிநிதிகள் குழுவை கேட்டு கொண்டார்.
பழங்குடி சமூக மக்கள் வைத்த கோரிக்கை:
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து தனி நிர்வாகத்தை கோரி பழங்குடி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக, மாநில காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் மெய்தெயி சமூக மக்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பழங்குடி மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக அமித் ஷா முக்கிய உத்தரவாதம் அளித்துள்ளார்.
குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வாழும் மலைப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படைகள் இல்லாமல் மாநில காவல்துறை சோதனை நடத்தாது என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த உத்தரவாதம்:
அமித் ஷாவுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பழங்குடி தலைவர்கள் மன்றத்தின் (ITLF) பொதுச் செயலாளர் மான் தாம்பிங், இதுகுறித்து விவரிக்கையில், "மலைப்பகுதிகளில் பாதுகாப்பு படைகள் இல்லாமல் மாநில கமாண்டோக்கள் சோதனை நடத்த மாட்டார்கள். அதேபோல, மலைப்பகுதிக்கு செல்லும் சோதனைச்சாவடிகளில் அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் காவலுக்கு நிற்பார்கள் என அமித் ஷா உறுதி அளித்துள்ளார்" என்றார்.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பழங்குடி தலைவர்கள் மன்றத்தின் சார்பில் அமித் ஷாவிடம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மற்றொரு தலைவர் இதுகுறித்து விவரிக்கையில், "கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தீர்க்கமான தீர்வுகள் வழங்கப்படவில்லை. எப்போது எல்லாம் அரசியல் தீர்வு கோருகிறோமோ, அப்போது எல்லாம் முதலில் அமைதியை நிலைநாட்டுங்கள் எனக் கூறிவிடுகின்றனர்" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)