CM Uddhav Leaves Official Home: அரசு இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் வெளியேறிய உத்தவ் தாக்ரே! - பின்னணி என்ன ?
”நான் ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்கிறேன். ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும்.”
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே தனது குடும்பத்துடன் முதலமைச்சர் இல்லத்தில் இருந்து நேற்று இரவு வெளியேறினார்.
பதவி விலகும் முதல்வர் ? :
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜாகவின் குதிரை பேரத்தில் விலை போயிருப்பதாக வெளிப்படையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே நேற்று எம்.எல்.ஏக்களுக்கு நான் முதல்வராக இருப்பதில் விருப்பம் இல்லை என்றால் பதவி விலக தயாராக இருக்கிறேன்..நான் ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்கிறேன். ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும். என்னிடம் குறை இருந்தால் நேரடியாக என்னிடமே தெரிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு சூரத்தில் அமர்ந்திருக்க வேண்டிய அவசியமென்ன எனக் குறிப்பிட்டுள்ளார்.
#WATCH | Shiv Sena workers, supporters showered petals and raised slogans in support of Maharashtra CM Uddhav Thackeray when he left with his family from his official residence 'Versha Bungalow', last night amid political instability in the state pic.twitter.com/QsZSDQEoiq
— ANI (@ANI) June 23, 2022
பங்களாவை விட்டு வெளியேறிய முதல்வர் :
இந்த நிலையில் நேற்று இரவு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே , தனது குடும்பத்துடன் முதல்வருக்காக ஒதுக்கப்பட்டிருந்த , அதிகாரப்பூர்வ இல்லமான “ வர்ஷா பங்களாவில்” இருந்து வெளியேறினார். அங்கு சூழிந்திருந்த சிவசேனா தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மலர்களை தூவி அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
என்னதான் பிரச்சனை :
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில் 106 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பாண்மைக்கு 144 இடங்கள் தேவைப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தன.
பெரும்பான்மைக்கு ஆதரவு தேவை :ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழந்த நிலையில், தற்போது 144 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவை. சிவசேனா கட்சியிலிருந்து 21 உறுப்பினர்கள் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது 34 பேர் உள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 131 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை
பாஜக பிளான்:
இந்நிலையில் தமக்கு 135 பெரும்பான்மை இருப்பதாக பாஜக கூறி வருகிறது. இது பெரும்பான்மைக்கு 27 இடங்களை கொண்டுள்ள மற்றவை ஆதரித்தால் மட்டுமே சாத்தியம் . ஆனால் சிவசேனா கட்சியில் இருந்த 21 உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குஜராத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இது சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு மிக சிக்கலான காலமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் பாஜக கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது, அவர்களால் சிலரை விலைக்கு வாங்கி அசாதாரண சூழலை மட்டுமே ஏற்படுத்த முடியும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் ராவத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் முதல்வர் உத்தவ் தாக்ரே பங்களாவை விட்டு வெளியேறியுள்ளார்.