உள்ளே விட மறுத்த போலீஸ்! சுவர் ஏறி குதித்த அகிலேஷ் யாதவ் - முன்னாள் முதலமைச்சருக்கு நடந்தது என்ன?
சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அகிலேஷ் யாதவ், சுவரை ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும் சோசலிச தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான பங்காற்றியவர். குறிப்பாக, கடந்த 1970களில் எமர்ஜென்சி காலத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, ஜனதா கட்சியை வெற்றி பெற செய்தார். கடந்த 1979ஆம் ஆண்டு, இவர், இயற்கை எய்தினார்.
ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் வரை பலரும் அவருக்கு இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் பரபரப்பு:
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தில் மரியாதை செலுத்துவதற்காக அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், அங்கு சென்றிருந்தார். ஆனால், மையத்திற்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அகிலேஷ் யாதவ், மையத்தின் சுவரை ஏறி குதித்து உள்ளே செல்ல முயற்சி செய்தார். ஆனால், வளாகத்திற்குள் நுழையவிடாமல் போலீசார் தடுக்க முயன்றபோது அங்கு குழப்பம் நிலவியது. கூட்டத்தை கலைக்க காவல்துறை சிறிய தடியடி நடத்தினர்.
பாதுகாப்பு காரணங்கள் காரணமாக உள்ளே செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச மையத்தை கட்ட முயற்சி எடுத்தவர் முன்னாள் முதலமைச்சரும் அகிலேஷ் யாதவின் தந்தையுமான முலாயம் சிங் யாதவ்.
நடந்தது என்ன?
முலாயம் சிங் முதலமைச்சராக பதவி வகித்தபோதுதான், சர்வதேச மையத்தை கட்ட கோமதி நகரில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் எதிரே மூன்று ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்தபோது, சர்வதேச மையம் திறக்கப்பட்டது.
சுவர் ஏறி குதித்து மையத்திற்கு உள்ளே சென்ற அகிலேஷ், அங்குள்ள திருவுருவ சிலைக்கு அவர் மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "என்னைத் தடுக்க போலீஸாரை இங்கு நிறுத்தியிருப்பது வருத்தமாக இருக்கிறது. என்னைத் தடுப்பவர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மையத்தின் திறப்பு விழா நடந்தபோது முலாயம் சிங் இங்கு வந்திருந்தார் என்பது எனக்கு நினைவிருக்கிறது.
ஒரு சோசலிஸ்ட் தலைவருக்காக இங்கு ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட்டது. சோசலிஸ்ட் தலைவருக்காக கட்டப்பட்ட ஒரே அருங்காட்சியகம். எனவே மக்கள் அவரது வாழ்க்கையால் ஈர்க்கப்படலாம். ஜனநாயகத்தில் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவது மக்களை ஊக்கப்படுத்தலாம். மக்களின் குரலை நசுக்குகிறீர்கள். மக்களை உள்ளே நுழைய விடமாட்டார்கள்" என்றார்.