”சமாஜ்வாதிக்கு தலித்துகள் வெறும் வாக்குவங்கி; கூட்டணிக்கு வாய்ப்பில்லை” : பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத்
சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டு சேரும் என எதிர்பார்க்கப்பட்ட பீம் ஆர்மி அரசியல் பிரிவான ஆசாத் சமாஜ் கட்சி, கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது
சமாஜ்வாதிக் கட்சியுடன் கூட்டு சேரும் என எதிர்பார்க்கப்பட்ட பீம் ஆர்மி அரசியல் பிரிவான ஆசாத் சமாஜ் கட்சி, கூட்டணிக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதிவரை 7 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அங்கு கட்சித் தாவல்களும், கூட்டணி பேரங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த முறை பாஜகவுக்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியினருக்குமே கடுமையான போட்டி எனக் கூறப்படும் நிலையில் கூட்டணி வலுப்படுத்து இருக்கட்சிகளும் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றன. இந்நிலையில், சமாஜ்வாதிக் கட்சியுடன் கூட்டு சேரும் என எதிர்பார்க்கப்பட்ட ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணிக்கு வாய்ப்பில்லை எனக் கைவிரித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் அளித்தப் பேட்டியில், ஆழமாக ஆலோசித்தோம். முடிவில்,அகிலேஷ் யாதவுக்கு கூட்டணியில் தலித்துகள் வேண்டாம் எனத் தெரிந்து கொண்டோம். அவருக்கு தலித்துகளின் வாக்குவங்கி மட்டுமே போதும் என நினைக்கிறார். அவர் பகுஜன் சமாஜ் கட்சியினரை அவமதித்தை அறிந்தேன். நானும், அகிலேஷுடன் கூட்டணி அமைக்க ஒரு மாதம் மூன்று நாட்களாக முயன்று கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
"தலித்துகள் அகிலேஷுக்கு வாக்களித்தாலும் கூட பின்னாளில் நாங்கள் தாக்கப்பட்டாலோ, எங்கள் உடைமைகள் அபகரிக்கப்பட்டாலோ, எங்கள் பெண்டிர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாலோ கூட அகிலேஷிடம் நீதி கேட்க முடியாது என்றே தோன்றுகிறது. அதனால், இந்தக் கூட்டணி அமையாது" என்று கூறினார்.
After all the discussions, in the end, I felt that Akhilesh Yadav does not want Dalits in this alliance, he just wants Dalit vote bank. He humiliated the people of Bahujan Samaj, I tried for 1 month 3 days but the alliance could not happen: Bhim Army Chief Chandrashekhar Azad pic.twitter.com/Yx3YgMT9wY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 15, 2022
தொகுதிப் பங்கீட்டில் பிரச்சனை:
ஆனால், கூட்டணி அமையாததற்கு தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சனையே காரணம் எனக் கூறப்படுகிறது. பீர் ஆர்மி அரசியல் பிரிவான ஆசாத் சமாஜ் கட்சி 10 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் அகிலேஷ் வெறும் 3 தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்கு கொடுக்க முன்வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே சந்திரசேகர ஆசாத் கூட்டணி அமையாது எனக் கூறியதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில் அடுத்த நகர்வு குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்போவதாக சந்திரசேகர ஆசாத் தெரிவித்துள்ளார். மூன்றாவது அணிக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.