Akasa Air: அடுத்தாண்டுக்குள் 1000 பேருக்கு வேலை - ஆகாச ஏர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
விமானங்களின் எண்ணிக்கையும் விமானம் சென்று சேரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 1000 பேரை பணியில் புதியதாக நியமிக்கள்ளது ஆகாச ஏர் நிறுவனம்.
வரும் 2024ஆம் ஆண்டு, மார்ச் மாதத்திற்குள், 1000 பேரை புதியதாக பணிக்கு நியமிக்க உள்ளதாக ஆகாச ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம், அந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரிக்க உள்ளது.
விமானங்களின் எண்ணிக்கையும் விமானம் சென்று சேரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், 1000 பேரை பணியில் அமர்த்த உள்ளது ஆகாச ஏர் நிறுவனம்.
வெளிநாடுகளுக்கு இயக்க திட்டம்:
ஏழு மாதங்களுக்கு முன்னர்தான், இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, வெளிநாடுகளுக்கு இயக்க விமான நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. எந்தெந்த நாடுகளுக்கு இயக்கப்பட வேண்டும் என்பதை ஆகாச ஏர் நிறுவனம் இன்னும் இறுதி செய்யவில்லை.
இதுகுறித்து விரிவாக பேசியுள்ள ஆகாச ஏர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான வினய் துபே, "இந்தாண்டின் இறுதிக்குள் மூன்று இலக்கு எண்ணிக்கையில் விமானங்கள் வாங்க ஆர்டர் செய்யப்படும். இன்று எங்களிடம் 2,000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர்.
அடுத்த நிதியாண்டின் இறுதியில், 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கொண்ட நிறுவனமாக இருக்கும். (அவர்களில், சுமார் 1,100 விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உள்ளனர்). இன்று எங்களிடம் விமானம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், மூன்று மாதத்திற்குள் வாங்கப்படும் விமானங்களுக்காக ஊழியர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
மக்கள் வர வேண்டும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எனவே, நீங்கள் டெலிவரி செய்யும் விமானங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முன்கூட்டியே ஆட்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்" என்றார்.
பெருந்தொற்றுக்கு பிறகு ஆட்களை சேர்ப்பது சவாலா?
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஆட்களை சேர்ப்பது சவாலாக மாறியுள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், "விமான நிறுவனம் நல்ல திறமையாளர்களை ஈர்ப்பது அதிர்ஷ்டம். ஊழியர்கள் மீது அதிக கவனம் செலுத்தும் நிறுவனமாக இருக்க வேண்டும்.
நாங்கள் ஏற்கனவே ஒரு நாளைக்கு 110 விமானங்களை இயக்கி வருகிறோம். கோடை சீசன் முடிவதற்குள் ஒரு நாளைக்கு 150 விமானங்களை இயக்குவோம். இது தொடர் வளர்ச்சியாக இருக்கும். எங்களுக்கு பங்கு சந்தையில் இலக்குகள் இல்லை. விமானப் போக்குவரத்தில் எந்த இடத்தையும் துரத்தவில்லை.
வலுவான நிதி கட்டமைப்பு:
மேலும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்கான இலக்கை நாங்கள் பெற்றுள்ளோம். எங்கள் ஊழியர்களை மகிழ்ச்சியடையச் செய்ய இலக்கு வைத்துள்ளோம். அதைத்தான் நாங்கள் செய்கிறோம். அதைச் செய்ய முடியும், மிகவும் வலுவான நிதி கட்டமைப்பைப் பெற்றிருந்தால் அது நிலையானது. எனவே, மூன்று முக்கியமான விவகாரங்களில் கவனம் செலுத்து வருகிறோம்" என்றார்.
72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க ஆகாச ஏர் நிறுவனம் ஆர்டர் கொடுத்தது. அதில், 19 விமானங்கள் ஏற்கனவே டெலிவரி செய்யப்பட்டுவிட்டது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 20ஆவது விமானம் டெலிவரி செய்யப்படும். இதையடுத்து, விமானங்களை வெளிநாடுகளுக்கு இயக்குவதற்கான தகுதியை பெறும்.